‘ தேசத்தை நேசித்து செயற்படுபவர்கள் செருப்பாயிருந்தாவது உழைப்போம் என்று எண்ணுவோம் ” -தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு!

0
584

‘ தேசத்தை நேசித்து செயற்படுபவர்கள் செருப்பாயிருந்தாவது உழைப்போம் என்று எண்ணுவோம் ”

அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கும், விளையாட்டுக்கழகத்திற்கும், வீரர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையினரது 2017 ஆம் ஆண்டுக்கான செய்தி.
15.12.2016
புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களும், அதன் அடுத்த தலைமுறையினரும் ஒவ்வொரு துறைகளிலும் தலைசிறந்தவர்களாக வளர வேண்டும், வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பது விடுதலையை வேண்டி நிற்கும் அனைத்து தமிழ் உள்ளங்களின் பெருவிருப்பாக இருந்து வருவதை அனைவரும் அறிவீர்கள். கல்வி, கலை, விளையாட்டு என்பவற்றுடன் தாய் மொழியிலும், தாய் நாட்டிலும் தன் இனத்திலும், அதன் விடுதலையிலும் பற்றுக் கொண்டவர்களாக அவர்களை உரிய முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதால் தாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டுச்சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாகவும், கடமையுணர்வு கொண்டவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும், எமது இனத்தை வெளிக்காட்டுவதற்கு, தமிழர் கட்டமைப்புக்கள் மிகவும் அவசியம் என்பது பலரின் பேரவாவாக இருந்து வந்துள்ளது.
அந்த வகையிலேதான் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பிரான்சில் வாழும் தமிழர்களின் அனைத்து நலன்களிலும் அக்கறை கொண்டு தாயக தேசத்தின் பணிப்பின் பேரில் உருவாக்கப்பட்டதே தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்கின்ற பெரிய தாய்க்கட்டமைப்பாகும். அதன் கீழ் ஒவ்வொரு துறைகள் சார்ந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு அவைகள் ஆரம்பகாலங்களில் இருந்து தமிழீழ அரசின் நெறிப்படுத்தலில்  திறம்பட செயற்பட்டு வந்திருந்தமையும், அதற்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் சமாதான காலப்பகுதியில் தாயகத்திலிருந்து ஒவ்வொரு துறைசார்ந்தவர்கள் இங்கு வந்திருந்தமையும் புலத்தில் தாயக விடுதலைக்காக உழைக்கின்ற செயற்பாட்டாளர்களுடனும், மக்களுடனும், பல்வேறு சந்திப்புக்கள் நடைபெற்றதோடு ஒவ்வொரு துறைகளின் செயற்பாடுகள் நடைமுறைகள் என்பன பகிரப்பட்டன என்பதும் அனைவரும் அறிந்த தொரு விடயமுமாகும்.
பிரான்சில் வாழும் எமது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கோடும் அவர்களை விளையாட்டுக்களில் தலைசிறந்த வீரர்களாக உருவாக்கி அந்த வீரர்கள் ஒரு வீரனுக்குரிய தகுதிகளான வெற்றி தோல்விகளை சமமாக மதித்தல், சகோதரத்துவத்தை பேணுதல், விட்டுக்கொடுத்தல், அதியுச்ச திறனை வெளிக்காட்டுதல், சட்ட விதிமுறைகளைப் பேணுதல் கற்றோர்களுக்கும், மற்றோர்களுக்கும் மதிப்புக் கொடுத்தல் என்ற முக்கியமான பண்புகளோடு வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கமையவும் அது ஒரு கட்டமைப்பாக உருவாக்கப்படல் வேண்டும் என்பதற்கமையவும் அந்தக் கட்டமைப்பானது சரியாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் பொறுப்புமிக்கதாகவும், பக்கசார்பற்றதாகச் செயற்படவேண்டும் என்ற காரணத்தால், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உப கட்டமைப்பான தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் உருவாக்கம் செய்யப்பட்டதே பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனமாகும். பின்வரும் காலங்களில் ஈழத்தமிழர் துடுப்பெடுத்தாட்டச் சம்மேளனமும், ஈழத்தமிழர் கரப்பந்தாட்டச் சம்மேளனமும் எம்மால் உருவாக்கம் செய்யப்பட்டிருந்தன. இச் சம்மேளனங்களை தரமாக ஒழுங்கு படுத்தும் வகையில் சர்வதேச விதிகளையும், நாம் வாழும் நாட்டின் விளையாட்டு விதிகளை உள்வாங்கிக்கொண்டு எம்மவர்களுக்கான ஒரு யாப்பினை உருவாக்கியதோடு காலத்திற்கு காலம் தாயகத்திலும் ஆலோசனைகளைப் பெற்று வழிநடாத்தி வந்ததோடு, சமாதான காலப்பகுதியில் தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் உட்பட விளையாட்டுத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரான்சு நாட்டுக்கும் வந்ததோடு விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்டவர் களுடனும், ஏனைய ஆர்வலர்களுடனும் சந்திப்புக்களையும் மேற்கொண்டு ஆலோசனை களையும் தமிழர் விளையாட்டுத்துறைக்கு தந்திருந்தன,  என்பதையும் அதனைக் கடைப்பிடித்து இதுவரை காலமும் மிகவும் சிறப்பான வகையில் செயற்பட்டிருந்தன. என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும், வன்முறைகளுக்குள்ளும், அவதூறுகளுக்குள்ளும், தமது பொருளாதாரத்தைவிட்டு ஓய்வு உறக்கமின்றி தேசப்பற்றுடன்,  கட்டமைப்புகளுக்கு மதிப்பளித்து பலர் உழைத்திருந்தனர். அவர்களை இந்நேரத்தில் நினைவுகொண்டு எமது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் உறுதியோடு அவர்கள் கரத்தினை இறுகவும் பற்றிக்கொள்கின்றோம்.
சனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து, 20 இற்கும் மேற்பட்ட கழகங்களின் ஆதரவுடன், பங்களிப்புடன் சம்மேளன யாப்பு விதிகளுக்கமையவே தலைவர், செயலாளர், பொருளாளர் நிர்வாக உறுப்பினர் தெரிவுசெயற்படுகின்றனர் என்பதும் அவர்கள் தமது பதவிக்காலம் வரை தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களை கடந்து அந்த யாப்பு விதிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக செயற்பட வேண்டியவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவ்வாறு செயற்பட்ட ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனமானது தமிழர் விளையாட்டுத் துறையின் நெறிப்படுத்தலிலும், ஆதரவுடனும் பிரான்சில் மட்டுமல்ல, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டித்தந்ததோடு மட்டுமல்லாது ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவிற்கும் சென்று பங்கு பற்றி சிறப்பித்தும் வந்திருந்தனர். இந்த வெற்றிகளையும் பெருமைகளை தேடித்தந்த வீரர்களையும், கழகங்களையும் இந்நேரத்தில் நன்றியோடு கரம் பற்றிக்கொள்கின்றோம்.
இத்தனை பெருமைக்கும், புகழுக்கும் பின்னால் சம்மேளனத்தின் பொறுப்பிலிருந்த சிலரின்  தூரநோக்கற்ற குறுகிய சிந்தனைகளாலும், செயற்பாட்டினாலும் தமிழர் விளையாட்டுத்துறை பல இடர்களை சந்தித்தாலும் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தை 2015 வரை மிகவும் சிறந்த முறையிலேயே வழிநடத்திச் சென்றிருக்கின்றபோதும் நீறுபூத்த நெருப்பாக இருந்த சிலர் இன்றைய காலச் சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்கள் எமக்கு ஏற்படுத்திய இடர்கள் நெருக்கடிகள் பற்றியும் நாம் எமது மக்களுக்கு தெரிவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையிட்டு மிகவும் மனக்கிலேச மடைகின் றோம். ஆனாலும் உண்மை நிலையைத் தெரியப்படுத்தவேண்டியது எமது தார்மீக கடமையாகும்.
தமிழர் விளையாட்டுத்துறையின் உதவிக்கரமாக இருக்கவேண்டிய ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனம் இந்த வருடம் 2016 இல் விளையாட்டுத்துறையின் நெறிப்படுத்தலில் இருந்து தவறி தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபடத்தொடங்கிய மையும் இதனால் கழகங்களுக்களுக்கு மத்தியிலும், வீரர்களுக்கு மத்தியிலும் குழப்பங்கள் ஏற்படத்தொடங்கியமையும், இது பிரான்சு நாட்டைக் கடந்து ஏனைய நாடுகளில் நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டிகளிலும் எதிரொலித்திருந்தமையாலும், அந்த நாடுகளில் போட்டிகளை நடத்துனர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் தமது ஆதங்கங்களைத் தெரியப்படுத்தியதன் பிரகாரம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினரை அழைத்து ஐந்து தடவைக்கு மேலாகப் பேச்சுக்களை நடாத்திக் காலத்திற்கேற்ற நடைமுறைகளையும் எடுத்துக்கூறி சம்மேளன யாப்பு விதிகளின் படி நடக்கும்படி தமிழர் விளையாட்டுத்துறையின் மூலம் ஓர் அறிவுறுத்தல்களைக் கொடுத்திருந் தோம். அதற்கு உடன் பட்டுச் சென்ற சம்மேளன நிர்வாகத்தினர் வெளியில் உள்ளவர்களின் தவறான வழிநடத்தலுக்கு துணைபோகும் வகையில் நடக்கத் தொடங்கியது மட்டுமல்லாது. எந்த நோக்கத்திற்காக விளையாட்டு வீரர்களையும், சம்மேளனத்தையும் உருவாக்கினோமோ அதனையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வன்முறைக் கலாச்சாரம் கொண்ட நிலைப்பாட்டில் தொடர முற்பட்டிருந்தனர். தமிழர் விளையாட்டுத்துறை 2016ம் ஆண்டு மாவீரர்களின் நினைவு சுமந்த போட்டிகள் நடாத்துவதற்கு தயாரானவேளை இதனை ஒரு களமாக ஆக்கிக் கொண்டனர். கடந்த பல ஆண்டுகளாகத் தேசப்பற்றுடனும், விளையாட்டுத்துறையில் அர்ப்பணிப்போடும் செயற்பட்டவரும், ஒவ்வொரு போட்டிகளிலும் நடுவராகக் கடமையாற்றி வீரர்களதும், கழகங்களினதும் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்ட தேசப்பற்றாளர் மீது மாவீரர் நினைவு சுமந்த போட்டியின் தொடக்க நாளிலேயே முகமூடியணிந்து கொண்டு கொலை வெறித்தாக்குதலை நடாத்தியிருந்தனர். இதனால் இன்றுவரை இந்நபரின் உடலும் வாழ்வும் துயரமான நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. இந்த வன்முறை நிறைந்த நிலைப்பாட்டினை உருவாக்கியோ, அல்லது அதற்கு வழிசமைத்துக்கொடுக்க ஒரு காரணமாக ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளன நிர்வாகம் இருந்திருக்கின்றது என்பதே உண்மை யாகும். மேலும் இச்சம்மேளமானது பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறைக்குச் சொந்த மான இலட்சனையை எந்தவித அறிவித்தலோ, அனுமதியை பெற்றுக்கொள்ளாது பாவித்திருந்தமை யாப்பு விதிகளுக்கு முரணாகவும், பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுத்துறை யாப்பு விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டமையாகும். இவர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு எம்மை யொரு இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது.
சம்மேளனத்தின் தலைமையில் பங்கு வகிப்பவர் எப்பொழுதும் தேசப்பற்றுள்ள வராகவும், நடுநிலைமை கொண்டவராகவும், உண்மைத்தன்மை, மற்றவர்களை நேசித்தல் மதிப்புக் கொடுப்பவராக இருக்க வேண்டும் என்பதற்கமையவே கடந்த கால சம்மேளனத் தலைமைத் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதில் தலைமையேற்று செயற்பட்டவர்களில் சிலர் விரும்பியோ, விரும்பாமலோ கட்டுப்பாடுடன் நடக்க வேண்டியதாய் இருந்தமையும், அதனை நடைமுறையில் கொண்டு வருவதற்குத் தமிழர் விளையாட்டுத்துறையானது கடுமையான முயற்சியில் ஈடுபட்ட போது பல்வேறு நெருக்கடிகளையும், அவர்களின் ஒத்துழையாத் தன்மையும், தான்தோன்றித்தனமான போக்கில் அவர்கள் சென்றமை அனைத்துக் கழகங்களும் தெரிந்து கொண்டதொரு விடயமே.  ஆனாலும் இவர்களின் அனைத்து தடைகளையும் தாண்டிச் சம்மேளனத்தின் தலைமைத் தெரிவில் இருந்த வேளை இளையவர்களின் வருகையும், அவர்களின் நிர்வாகத்திறமையும் ஊக்கிவிக்க வேண்டும் என்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் எதிர்பார்ப்புக்கமையவே பிரான்சில் நீண்ட காலமாக விளையாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்டவரும், ஒரு விளையாட்டுக்கழகத்தை நடாத்தி வந்தவரும், சம்மேளனத்தினதும், தமிழர் விளையாட்டுத் துறையினதும் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராகவும் இருந்தவர் சம்மேளன தலைமைப்பதவிக்கு தெரிவு செய்யப்படுகின்றார் என்ற சமிக்ஞை விளையாட்டுத்துறை மூலம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு கிடைத்த போது அதனை சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டதோடு, சம்பந்தப்பட்டவரை அழைத்து சர்வதேச ரீதியில் தேசவிடுதலைக்காக உழைக்கின்றவர்கள் மூலம் கனம் பண்ணப்பட்டதுடன் அவரை தட்டிக்கொடுத்தபோதும், தமிழர் விளையாட்டுத்துறையை சம்மேளனத்தின் உதவியோடு இன்னும் மேலோங்கச் செய்து வீரர்களை சர்வதேச ரீதியில் மிளிரச்செய்யலாம் என்கின்ற அனைவரின் கனவை நீறுபூக்கச் செய்யும் வகையில், அத்தலைமை நடந்து கொண்டதோடு எல்லாவற்றையும் மறந்து இன்று வரை தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. மிகுந்த அர்பணிப்புகளுக்கு மத்தியில் வழி நடத்திக் கொண்டு சென்ற ஈழத்தமிழர் உதைபந்தாட்ட  சம்மேளனத்தை இவ்வாறு தான்தோன்றித்தனமாகத் தொடர இனியும் அனுமதிக்க முடியாது என்ற சூழ்நிலையிலேயே தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் உண்மைநிலைகளை ஓரளவிற்கு எல்லோருக்கும் முற்கூட்டியே தெரியப்படுத்துவதோடு, வரும் 2017 ஆம் ஆண்டுக்காக 2016 -ல் தெரிவு செய்யப்படவிருக்கும் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்திற்கும், நிர்வாகத்தினருக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லையென்பதை தெரிவித்துக் கொள்வதோடு, சர்வதேச ரீதியாகவும், ஐரோப்பிய ரீதியாகவும் நடைபெறும் போட்டிகளில் தமிழர் விளையாட்டுத்துறையினதும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரதும், ஒப்புதலும், அனுமதியுமின்றி பங்குகொள்ள முடியாது என்பதையும் அனைவரின் கவனத்திற்கு இத்தால் அறியத்தருகின்றோம்.
‘ தேசத்தை நேசித்து செயற்படுபவர்கள் செருப்பாயிருந்தாவது உழைப்போம்” என்பதற்கமைய பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறையானது தொடர்ந்தும் 2017 ஆம் ஆண்டு அனைத்து போட்டிகளையும் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன் குழப்பமான நிலையில் நின்றுகொண்டிருக்கும் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் ஒரு கட்டுப் பாட்டுடன், இதுவரை காலமும் வழிநடத்திய தலைமைத் தாய் அமைப்புடன் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்கின்ற அனைத்து விளையாட்டுக்கழகங்களின் எதிர்பார்ப்புக்கும், அவர்களின் முயற்சிக்கும் நாம் மதிப்பளித்து வரும் 2017 இல் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் உருவாக்கும் வரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நெறிப்படுத்தலில் தமிழர் விளையாட்டுத்துறையின் கீழ் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ”
தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here