இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் விசாரணைக்கு இலங் கை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவிக்கு வழங்கிய பேட்டியிலேயே பிரதமர் ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவுடன் பின் வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயற்பட்டார். அவரின் காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாங்கள் மறு ஆய்வு செய்ய உள்ளோம்.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது இழைத்த குற்றங்களுக்காக, ஐ.நா. நடத்தும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை அளிக்கும். கொள்கைரீதியாக, தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமையை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளது”.