வீரமகளை தந்ததற்காக தலைவணங்குகின்றோம் தந்தையே!

0
262

எமது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதியின் தந்தையான பேதுறு அவர்கள் சுகயீனம் காரணமாக 04-12-2016 அன்று இவ்வுலகைவிட்டு விடைபெற்றுள்ளார்.
எங்களுடைய இந்த வீரத்தந்தை போற்றுதலுக்குரியவர், மரியாதைக்குரியவர். இவருடைய சிறப்பான வழிகாட்டலில் பிறந்து வளர்ந்த மாலதி எமது சமூக ஒடுக்குமுறைகளை உடைத்தெறிந்து, சமூகவிடுதலைக்காகவும், எமது தேச விடுதலைக்காகவும் புயலாக எழுந்து போராடப்புறப்பட்ட போது தன்னுடைய அன்பு மகளுக்கு ஆதரவாக நின்று ஆசீர்வாதம் செய்தவர் இவர்.
மாலதி போராடப்புறப்பட்ட காலப்பகுதியில் தமிழ் பெண்களுடைய ஆளுமைகள் முடக்கப்பட்டு, குனிந்த தலை நிமிராதவர்களாக, மென்மையானவார்களாக அடுப்பங்கரையில் அடங்கிக்கிடப்பவர்களாக ஓர் ஒடுக்கப்பட்ட பெண் சமூகமாகவே எமது சமூகம் இருந்தது.
இவ்வாறான அடக்குமுறைகளை உடைத்தெறிந்து தமிழீழ தேசியத்தலைவரின் வழிகாட்டலில் முதல் ஈழத்துப்பெண் சாதனையாளராக, எம் இனத்துப்பெண்களுக்கு உதாரணமாக 2ம்லெப் மாலதி சாதித்துக்காட்டிய போது,பிற்போக்குச்சிந்தனையாளர்களின் கருத்துக்களைக்கேட்டு அலட்டிக்கொள்ளாமல் தன் மகளைப் பெற்ற பெருமைக்குரிய தந்தையாக நிமிர்ந்து நின்று 2009ம் ஆண்டு வரை எம் பெண் போராளிகளோடு உறவாடிய பெருமைக்குரிய தந்தை இவர்.
எம் தேசத்தின் நாட்டுப்பற்றாளராக திகழ்ந்த பேதுறு அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிராத்திப்பதோடு தமிழ் பெண்களாகிய எமக்கு வழிகாட்டியாக திகழ வீரமகளை தந்ததற்காக தலைவணங்குகின்றோம் தந்தையே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here