கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தில் நீராடச்சென்ற அறுவரில் சகோதரிகள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் ஆனைவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் நிதர்சினி (வயது 17), ரகுநாதான் கவிப்பிரியா (வயது 18) ஆகிய சகோதரிகளே உயிரிழந்தவர்களாவார்.
தங்குமிடமொன்றிலிருந்து கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்த கவிப்பிரியா, பாடசாலை விடுமுறையை அடு த்து வீடு சென்றுள்ளார்.அவரும் அவரது சகோதரியும் சகோரியின் கணவரும் (பதிவுத் திருமணம் செய்யப்படவில்லை) மற்றும் 3 சிறுவர்களுமாக கிளிநொச்சி ஆணைவிழுந்தான் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளனர்.
குளத்தில் காணப்பட்ட சிறிய படகு ஒன்றில் ஏறிய இரு சகோதரிகளும் மூத்த சகோதரியின் கணவரும் சிறுவர்களை கரையில் இருத்தி விட்டு குளத்தை சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.குளத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு மீளவும் கரைக்கு திரும்பிய படகில் இருந்து சகோதரிகள் இருவரும் இறங்க கரையிலிருந்த 3 சிறுவர்களும் படகில் ஏறியுள்ளனர்.படகு மீளவும் மூத்த சகோதரியின் கணவன் மற்றும் சிறுவர்களுடன் குளத்தை சுற்றிப் பார்க்க புறப்பட்டு சென்றுள்ளது.
அவ்வேளையில் சகோதரிகள் இருவரும் குளத்தில் நீராடத் தொடங்கியுள்ளனர்.
இதன்போதே துரதிஷ்டவசமாக இவ் இருவரும் சேற்றில் புதையுண்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குளத்தை சுற்றிப் பார்க்க சென்ற படகு திரும்பிய பிறகே சகோதரிகள் ஆற்றில் மூழ்கியமை கணவருக்கு தெரியவந்த நிலையில் அவரது மீட்பு முயற்சியும் பலனளித்திருக்கவில்லை.
தொடர்ந்து சுழியோடிகள் உதவியுடன் சகோதரிகள் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டு அக்கராயன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் மரண விசாரணைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை க்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.