அரசியல் வானில் பிரகாசித்த வால்வெள்ளி மறைந்துவிட்டது;வடக்கு முதல்வர் ஜெயாவிற்கு இரங்கல்!

0
325
அரசியல் வானில் பிரகாசித்த வால்வெள்ளி ஒன்று மறைந்துவிட்டது என மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் இரங்கல் செய்தியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் அறுபத்து ஏழாவது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்றையதினம் எம் எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தும் ஒரு நிகழ்வு பற்றி இவ் உயரிய சபையில் பேசவேண்டியுள்ளது. தமிழ் நாட்டு அரசியலில் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா ஜெயராம் காலமானது எம் எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும் துயரத்தையும் ஏற் படுத்தியுள்ளது. வால்வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச் சென்று பிரகாசமாகி நின்று பின்னர் திடீரென மறைந்து விட்டது.
அண்மையிலே வட இந்திய பெண் ஊடகவியலாளர் சிமிகரை வால் என்பவருக்கு செல்வி ஜெயலலிதா ஜெயராம் ஆங்கிலத்தில் அளித்த ஒருபேட்டி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. அதைக் கேட்கும் போதுதான் சூழலானது எவ்வாறு ஒரு மனிதரை முழுமையாக மாற்றக்கூடிய வலுவுடையது என்பதை அறியக் கூடியதாக இருந்தது.
மிக மெல்லிய சுபாவங் கொண்ட, கல்வியில் அதிகம் சிரத்தை கொண்ட, செழிப்பான ஒரு மென்மையான சூழலில் வளர்ந்த ஒருவர் எவ்வாறு பல விதமான முரட்டுச் சூழல்களை எதிர்நோக்க வேண்டிவந்ததால் சாதுமிரண்டது போன்று மிகவும் திடமான இரும்புப் பெண்மணியாக அவர்மாற வேண்டி வந்தது என்பதை அறியக் கூடியதாக இருந்தது.
எம்.ஜி.ஆர்  அரசியல் வானில் மின்னியபோது அது அவருக்குப் பெருமை சேர்த்தாலும் அவருக்குப் பாரிய இடர்களையும் இன்னல்களையும் அரசியலில் ஏற்படுத்தவில்லை.
ஆனால் செல்வி ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார் என்பது அவரின் திடசங்கற்பத்தையும் உழைப்பையும் விடாமுயற்சியையும்  கெட்டித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது. அண்மையில் அவரின் அழைப்பின் பேரில் அவரைச் சென்று சந்திப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். விரைவில் குணமடைந்து வருவார் என எதிர்பார்த்திருந்தோம். காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டுபோய்விட்டான்.
“அம்மா” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவர் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது பாரதநாட்டு அரசியலிலும் முக்கிய பங்குவகித்தார். அவர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது. தமிழின் மீதும் தமிழ் மக்கள் வாழ்வின் மீதும் தமிழ் மக்கள் எதிர்காலம் மீதும் அவர் மிக்க பற்றுறுதி கொண்டிருந்தார். கரி சனையுடன் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை எடுத்துவந்தார். பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார். தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒருபலம் மிக்க அரசியற் தலைவரை இழந்துவிட்டது. அவர் ஆத்மாசாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதை விட எம்மால் அவர் சார்பாக வேறு எதையும் இத்தருணத்தில் செய்யமுடியாதிருக்கின்றது என்பது மனவருத்தத்தைத் தருகின்றது.
எம் மக்களினது ஒன்றுபட்ட சோகத்தினையும் மனச் சுமையினையும் தமிழ்நாட்டு மக்களுடன் இத் தருணத்தில் பகிர்ந்து கொள்கின்றோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here