யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை அங்கிருந்து அகற்று வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.
குறித்த நிறுவனத்தின் செயற்பாட்டினால் அந்தப் பிரதேசத்திலுள்ள குடிநீர் கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகள் கலந்துள்ளதாக சுட்டிக்காட்டியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தமது பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கிகளைப் பயன்படுத்தி யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகித்து வந்த நொதெர்ன் பவர் என்ற இந்த நிறுவனத்தின் மின்நிலையத்தினால் வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தில் ஊறி கிணற்று நீருடன் கலந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
இதனால் வலிகாமம் வடக்கு பகுதியின் பல பகுதிகளில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
குறித்த பிரதேசத்தில் உள்ள பள்ளிக்கூடங்களின் கிணறுகளிலும் எண்ணெய் கலந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உண்மை நிலையைக் கண்டறிந்துள்ள போதிலும், நொதெர்ன் பவர் மின் நிலையத்தின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான சித்தார்த்தன், கஜதீபன், வலிகாமம் பிரதேச சபைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஊர் மக்களும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, குறித்த பிரதேசத்தில் குடிநீருடன் எண்ணெய் கலப்பதற்கு தங்களின் மின்நிலையம் காரணமல்ல என்று நொதெர்ன் பவர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி லால் பெரேரா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
நீதவான் தலைமையில் நடந்த சோதனை நடவடிக்கையின்போது, தங்களின் நிறுவனத்திலிருந்து எண்ணெய்க் கழிவுகள் வெளியேறுவதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.