யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசத்தில் முகாம் அமைப்பதற்காக கோரிய காணியை விட மேலதிகமாக 70 ஏக்கர் நிலத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்களின் காணிகள் விடுவிக்கப்படும்போது அங்கு இராணுவ முகாம் தொடர்ந்தும் இருக்கும் என படையினர் தெரிவித்துள்ளனர்.
வலிகாமம் வடக்கில் அண்மையில் 454 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. காங்கேசன்துறை மற்றும் தையிட்டி பிரதேசங்களில் உள்ள காணிகளே மக்களிடம் கையளிக்கப்பட்டன.
விடுவிக்கப்படும் காணிகளின் நடுவில் இரண்டு இராணுவ முகாம்கள் இருக்கும் என படையினரால் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்கேசன்துறையில் 40 ஏக்கரில் ஒரு படைமுகாமும் 70 ஏக்கரில் மற்றுமொரு படைமுகாமுமே தொடர்ந்தும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு படைமுகாம்களும் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதன்போது படையினர் கோரிய 40 மற்றும் 70 ஏக்கரை விட மேலதிகமாக 70 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
40 எக்கர் படை முகாம் 70 ஏக்கரிலும் 70 ஏக்கர் படைமுகாம் 110 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதயில் அமைந்துள்ள படைமுகாம்கள் தொடர்பான அளவுகள் படையினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் மாவட்ட செயலக அளவீடுகள் இன்னமும் முடிவுறவில்லை. அவ்வாறு அளவீடுகள் முடிவுற்றதும் வேறுபாடுகள் இருப்பின் படை அதிகாரிகளிடம் இதுதொடர்பில் உரையாடப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.