உலகத் தமிழர்களின் பேரன்புக்குரிய தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், காலமான செய்தினைக் கேள்வியுற்று பெரும் துயரத்தில் தமிழினம் ஆழ்ந்துள்ளது. எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழகத்து உறவுகளுடனும் இணைந்து இப்பெரும் துயரினைக் கடக்க ஈழத்தமிழர்களாகிய நாம், தோளோடு தோள் நிற்கின்றோம்.
உலக வரலாற்றில் ஆழமாய்த் தடம் பதித்துச் சென்ற மிக அரிதான அரசியல் ஆளுமைகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் ஒருவர். திரைத்துறை, அரசியல் என தான் கால்பதித்த இடங்களிலெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவர். மிகுந்த நெஞ்சுரம் மிக்கவராகவும், துணிச்சலான அரசியல் முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்திய இரும்புப் பெண்மணி! தமிழகத்திலும், இந்திய அளவிலும் பெண் தலைமைத்துவத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சரியெனப் பட்டதை எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி நடைமுறைப்படுத்துவதில் அசாத்தியத் துணிச்சல் மிக்கவர்.
ஈழத்தமிழர்களின் விவகாரத்திலும் இவர் எடுத்த முடிவுகள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களான, சர்வதேச சுயாதீன விசாரணை, தமிழீழ தாயகத்துக்கான பொது வாக்கெடுப்பு, சிறிலங்கா இந்தியாவின் நட்பு நாடு அல்ல என அறிவிக்கக் கோரி வலியுறுத்தல் போன்றவை என்றென்றும் ஈழத்தமிழர்களால் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பவை! தமிழக முதல்வரின் இழப்பு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகவே நாம் கருதுகின்றோம்.
உலகத்தமிழினம் இந்நூற்றாண்டின் பெரும் தலைவரை இழந்து தவிக்கிறது. காலம் இப்பெரும் துயரைக் கடந்து செல்வதற்கான வலிமையைத் தரட்டும்.
தமிழீழ மக்கள் பேரவை
பிரான்சு.