அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட உள்ள ஜெயலலிதாவின் உடலை பார்ப்பதற்காக அதிமுக தொண்டர்கள் சாலை முழுவதும் குவிந்து வருகின்றனர்.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 76 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, அப்பல்லோ மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிர் பிரிந்தது.
இந்த செய்தியால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்பல்லோ மருத்துவமனை அருகே திரண்ட தொண்டர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். பெண் தொண்டர்கள் கதறி அழுதனர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் பகுதியிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட உள்ள ஜெயலலிதாவின் உடலை பார்ப்பதற்காக அதிமுக தொண்டர்கள் சாலையின் இருபுறங்களிலும் குவிந்து வருகின்றனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போயஸ் கார்டன் இல்லத்தை சுற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு அதிமுக தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களது கூட்டத்தை கட்டுபடுத்தவும் போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.