வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா எனப் பெயரிடப்பட்டுள்ள புயலினால், வடக்கில் கடும் காற்றும் மழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ள நாடா புயல், யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு, அறிவித்துள்ளது. 1ஆம் திகதி (வியாழக்கிழமை) நள்ளிரவு புயல் சின்னம், தமிழ் நாட்டின் வடபகுதியூடாக நகருமெனவும் 2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படுமெனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மன்னார் முதல் திருகோணமலை வரையான காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் 3 மீற்றர் உயரத்துக்கு கடல் அலைகள் மேலெழும்பும் அபாயம் நிலவுவதாகவும், இதனால் கடலுக்குச் செல்வோர் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.