மாவீரர் தினமும், பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் பிறந்த தினமுமான நவம்பர் 27ம் திகதி, பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் நிகழ்வு மண்டபத்தில் வைத்து, ஈரழுரசு பத்திரிகைக் குழுமத்தினால் ‘பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ்’ எனும் நூல் எழுச்சியுடன் வெளியிடப்பட்டது.
எதிரியவன் தமிழீழப் போராட்டத்தின் வரலாற்றை நேரெதிர்மாறாக, உண்மைக்குப் புறம்பாகப் பதிவு செய்திடும் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளான். தர்மத்தின், நியாயத்தின் வழிநின்று தமிழீழ விடுதலைக்காகப் பேராடிய தளபதிகளின், வீரச்சமர்களை, தமிழீழ விடுதலைப் போரைக் காலத்தால் அழியாத ஆவணமாக்கவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் தமிழினம் நிற்கும் நேரத்தில், இந்தப் பெரும் முயற்சியை ஈழமுரசு செய்துள்ளது.
நிகழ்வினை ஈழமுரசு சார்பில் திரு. கோபி தொகுத்து வழங்க, நிகழ்வின் முதல் நிகழ்வாக, ஈழமுரசு ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்தவரும், சமர்க் களமுனைப் போராளியும், பெரும் தளபதிகளின் நண்பரும், தேசியத் தலைவருடன் ஆரம்பக் காலத்திலிருந்து செயற்பட்டவரும், வரலாற்று ஆய்வாளருமான திரு. ச.ச. முத்து அவர்கள், பிரிகேடியர் பால்ராஜ் அவர்களினதும் மாவீரர்களினதும் ஒப்பற்ற தியாகங்களை நினைவு கூர்ந்ததுடன், வரலாறுகள் பதிவுசெய்யப்பட்டு நூல்வடிவில் ஆவணமாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுதினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த நூலின் முதற்பிரதியை பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன், இத்தாவில் வராலாற்றுத் தரையிறக்கப் போரில், அவரின் வலதுகரமாக நின்று களமாடிய, திரு வேங்கை அவர்கள் வெளியிட்டுவைக்க, பல வரலாற்றுச் சமர்களில், தமிழீழத் தேசியத் தலைவருடனும், பல தளபதிகளுடனும் தோளோடு தோள் நின்று களமாடியவரும்,பிரகேடியர் பால்ராஜ் அவர்களுடன் மிகவும் நெருங்கிய தோழமையடன் பழகியவரும், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாட்டாளருமாகிய திரு. மேத்தா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்நூலின் பிரதியை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் மாவீரர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் துணைவியார் பெற்றுக் கொள்ள, அடுத்ததாக 30.04.1986 ஆம் ஆண்டில் வற்றாப்பளையில் வீரச்சாவடைந்த நாகராஜா அவர்களின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வர்தகப் பிரமுகர் திரு.மதிவதனன்,பரிஸ் தமிழ் சுதன், திரு சோதியழகன் ஆகியோர் இந்த நூலைப் பெற்றுச் சிறப்பித்தனர்.
இறுதியில், இந்த ‘பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ்’ வரலாற்று ஆவண நூலினை வெளியிட, மாவீரர் நாள் மேடையில் இடம் வழங்கியமைக்காக ஈழமுரசு குழுமம் தங்கள் நன்றியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரெஞ்சுக் கிளையினருக்குத் தெரிவித்தனர்.