இன்று மாவீரர் நாள் ;தாயகத்திலும் புலத்திலும் நினைவேந்தல்கள்!

0
673

Maaveerar-posterதமிழின விடுதலைக்காக இலட்சியத்துடன் போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றைய தினம் 27ஆம் திகதி தாயகத்திலும் புலத்திலும் பெரும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. போருக்குப்பின் என்றுமில்லாதவாறு இந்த வருடம் தாயகத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இன்று மாலை 6.05 மணியளவில் ஒட்டு மொத்த தமிழர்களும் தமது வீடுகளில், கோவில்களில் அல்லது பொது இடத்திலோ விளக்கேற்றி விடுதலை வேட்கையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூருமாறு பொது அமைப் புக்களும் தமிழ்க் கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால்  ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த ஒட்டுமொத்த போராளிகளின் கூட்டு நினைவாக மாவீரர் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மாவீரர் நாள் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் மாவீரர்களை பகிரங்கமாக நினைவு கூருவதற்கு இராணுவ கெடுபிடிகளால் பொதுமக்கள் அஞ்சினார்கள். எனினும் அந்த நிலை சற்று மாற்றமடைந்துள்ள நிலையில் எவ்வித தூண்டுதல்களும் இன்றியும் தாமாகவே மாவீரர்களை நினைவுகூர அனைவரும் ஆரம்பித்துள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் வழமை போன்று பகிரங்கமாக பெரும் எடுப்பில் நினைவேந்தல்கள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும் தாயகத்து நினைவு நிகழ்வுகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இம்முறை தாயகத்தில் மாவீ ரர் நாள் உணர்வுபூர்வமாக பல இடங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தன் ஆலயம் முன்பாக விளக்கேற்றி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதே போன்று வடமராட்சி உக்கிளாங்குளம்,  கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இன்று மாலை 6.05 மணியளவில் விளக்கேற்றி அனுஷ்டிக்கவுள்ளனர். நேற்றுமுன்தினமும், நேற்றைய தினமும் பற்றைகள் படர்ந்திருந்த குறித்த மாவீரர் துயிலுமில்லங்கள் பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் சிரமதான முறையில் துப்புரவு செய்யப்பட்டிருந்தன.
இதேபோன்று முல்லைத்தீவில் மாகாண சபை உறுப்பினரின் ஏற்பாட்டிலும், மன்னாரில் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் வவுனியாவில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டிலும் நினைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. யாழ். பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி எழுச்சியுடன் அனுஷ்டித்திருந்த நிலையில் இன்றைய தினமும் யாழ். பல்கலையில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. குறிப்பாக கிளிநொச்சியிலும் மன்னாரிலும் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்தில் நல்லூரிலும் இடம்பெறும் நினைவு நிகழ்வுகளில் பொது மக்களைக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் என்பது தேசத்தின் விடு தலைக்கான நாள். சத்திய இலட்சியத்திற்காக போராடியவர்களை நினைவுகூரும் நாள். தமிழருக்காகவும் தமிழ்தேசத்திற்காகவும் வாழ்ந்தவர்களின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் நாள். தங்களது சுய விருப்பு வெறுப்புகளையும், சுகபோகங்களையும் மறந்து தமிழ் சமூகத்திற்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கான நாள். அவர்களுக்காக மாவீரர் நாளன்று ஏற்றப்படும் சுடரில் உள்ள அக்கினி கொழுந்தில் மக்களும் தியாக வீரர்களின் உறவினர்களும் அந்த தியாகிகளை பார்க்கிறார்கள்.
தமிழர்களுக்காக அவ்வீரர்கள் தங்களது தனிப்பற்று, சுகபோகம் என்பவற்றை இழந்திருக்கிறார்கள். தமிழர்களுக்காக பாடுபட்டவர்களை தமிழர்கள் புனிதர்களாகவே நினைவு கூருகின்றார்கள். இந்த வீரர்கள் மரணித்திருந்தாலும் கூட காலத்தினால் சாகாதவர்கள். இவர்கள் மக்களின் விடிவிற்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டிருக்கிறார்கள்.
இவர்களின் சாவு ஓர் சரித்திரம். ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட இலட்சிய நெருப்பு அழிவதில்லை. சாவுக்கு அஞ்சாத எதையும் தாங்கும் இதயம் கொண்ட வீரர்கள் அவர்கள். இவ்வாறான வீரர்களின் நினைவு நாளில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் உள்ள துயிலுமில்லங்களில் அந்த வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இதில் மக்கள்  பங்கேற்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா ஆகியோரும் விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியும் மாவீரர்களை துயிலுமில்லங்களில் நினைவு கூருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது உள்ளத்தில் உள்ள விடுதலை வேட்கையை உலகிற்கு கூற அனைவரும் ஒன்று திரண்டு வருமாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்து ள்ளார். முன்னைய காலத்தைப் போன்று காணப்பட்ட அச்சுறுத்தலான நிலைமை தற்போது ஓரளவு நீங்கியிருக்கின்ற சூழலில் நினைவு கூரல்களில் மக்கள் குழப்பங்களின்றி அவ தானத்துடன் பங்கேற்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here