பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு 20.11.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கிளிச்சிப் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
ஆரம்பநிகழ்வுகள் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவாக கிளிச்சியில் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் இடம்பெற்றன. அங்கே ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதைத்தொடர்ந்து, அங்கிருந்து முழவு வாத்திய அணிவகுப்பு மதிப்பளித்தலுடன் மண்டபம் நோக்கி அழைத்துவரப்பட்டனர். மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பொதுச்சுடரினை பிரான்சு மாவீரர் பணிமனை சார்பில் திரு. பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். பிரெஞ்சுத்தேசியக் கொடியை கிளிச்சி மாநகரசபையைச் சேர்ந்த திரு.கிறிஸ்ரியோன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர் பொன்மலை அவர்கள் ஏற்றினார்.
நிகழ்வில், மாவீரர் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 1991 ஆம் ஆண்டு நாகர்கோயில் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.சின்னவீரன் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை கேணல் பருதி அவர்களின் தாயார் அணிவித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
ஆரம்ப நிகழ்வாக நிகழ்வுரையை மாவீரர் பணிமனையைச் சேர்ந்த திருமதி ஜெயராணி அவர்கள் ஏற்றினார்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளாக எழுச்சி நடனங்கள், பேச்சு, தனிநடிப்பு என்பன இடம்பெற்றன.
மதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் சகோதரர்மேடையில் மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் உணர்வுபொங்க கைகளைத் தட்டினர்.
தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.