தமிழீழ விடுதலைப் போரிலே தமது உயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு எழுச்சி வாரம் இன்று 21ஆம் திகதி ஆரம்பமாகி 27ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த ஏழு நாட்களில் தமிழர் தாயகம் முழுவதும் அமைதியான முறையில் நினைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
விடுதலைக்காக மடிந்த அனைத்து மாவீரர்களையும் மக்கள் அனைவரும் அச்சமின்றி நினைவு கூரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து அனைவரும் இதயசுத்தியுடன் மாவீரத் தெய்வங்களைப் பூசிக்கவேண்டும்.
ஒரு நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கிய போது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்தே இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகை யிடப்பட்டது.
அவ் வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.
படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத்துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறியமையினால் அவனது உடல் சோர் வடைகிறது.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்க வைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
தலைவரும் தோழர்களும் கண் கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப் பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறான். இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது. இந்த இளைஞனே தாயகத்தின் முதல் வித்து 2ஆம் லெப்ரினன்ட் சங்கர் சத்தியநாதன் என கூறப்படுகின்றார். இவ்வாறான உணர்ச்சி மிக்கதான வரலாற்றை கொண்ட, மாவீ ரர்தினம் அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும் வகையில் இன்றைய தினம் மாவீரர் வாரம் ஆரம்பமாகவுள்ளது. போர் நடை பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மாவீரர் துயிலுமில்லங்களில் தலைவர் பிரபாகரன் தலைமையில் பிரமாண்டமான முறையில் நடைபெறுவது வழமை, யுத்தத்தின் பின்னர் மாவீரர் துயிலுமில்லங்கள் உடைக்கப்பட்டு அவற்றில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
தற்போது வரை அவை முழுமையாக விடுவிக்கப்படவும் இல்லை. போரை நடத்திய கடந்தகால அரசாங்கம் மாவீரர்களை நினைவு கூர தடையும் விதித்திருந்தது.
இந்த நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்த அரசு நல்லிணக்கத்தினை முன்னெடுப்பதற்காக மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடையேதும் தெரிவித்திருக்கவில்லை.
எனினும் ஆங்காங்கே கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தனர். எனினும் இந்த வருடம் இந்த அச்சுறுத்தல்கள் எவையும் இருக்காது என கூறப்படுகின்ற நிலையில் யாழ்.நல்லூரில் எதிர்வரும் இருபத்தி ஏழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவீரர் தினம் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
இதே போன்று யாழ்.பல்கலைக்கழகத்திலும் வழமை போன்று மாவீரர் தினம் எழுச்சியுடன் நினைவு கூரவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புலம்பெயர் நாடுகளிலும் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்காவின் தலைநகரமான நியூயோர்க்கிலும் இம்முறை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதேவேளை தமிழின விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரர்களை தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் நினைவு கூர வேண்டும்.
இவ்வாறு ஒட்டுமொத்த தமிழர்களும் நினைவு கூருவதே எமக்காக மடிந்த உறவுகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும், இதன் மூலமே தீர்வொன்றையும் நாம் அடைந்துகொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.