சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் கிளிநொச்சி மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக் காரணமாக இலங்கையில் சில தினங்களுக்கு சீரற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் சராசரியாக 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்துள்ள நிலையில் இன்றும் அதே நிலைமை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்கு, தெற்கு, சப்ரமுவ, மத்திய, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் கடும் காற்றுடன் கூடிய கனமழை இன்றையதினமும் பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பகல் வேளை நீடித்த தொடர் மழை மாலை நேரம் இடியுடன் கூடிய கடும் மழையாக கொட்டித் தீர்த்துள்ளது.
இதனால் தாழ்வுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் இடம்பெயர நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.