கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் பலி!

0
179
eliகிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ள மாவட்ட சுகாதாரத்துறையினர், எலிக்காய்ச்சல் தொடர்பில் மக்களை அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி அன்று வயல் விதைப்பில் ஈடுபட்ட பின்னர் காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கிளிநொச்சி மருதநகரை சேர்ந்த 57 வயதுடைய குடும்பஸ்தரே எலிக் காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை   மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் குறிப்பாக விவசாயிகளை மிகவும் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சுகாதாரதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
எலிக்காய்ச்சல் ஒரு பக்ரீரியா எனும் நுண்ணுயிர் வகையைச் சேர்ந்த கிருமியால் உருவாகிறது. இக் கிருமி தொற்றிய எலிகளின் சிறுநீர் ஊடாகவே அந்த பக்ரீரியா வெளிச்சூழலுக்கு வந்து சேர்கிறது. இவ்வாறு வெளியேறிய பக்ரீரியாவானது வயல்களில் காணப்படும் சிறு கிடங்குகளில் நிற்கும் நீரிலும், வயல்களில் தேங்கியுள்ள நீர்ப்பரப்புகளிலும் தங்கிவிடுகிறது.
இவ்வாறு தங்கிவிடுகின்ற பக்ரீரியா  ஏற்கெனவே தோலில் இருக்கும் காயங்கள் மற்றும் வயலில் வேலைசெய்யும்போது ஏற்படக் கூடிய சிறு தோல் சிராய்ப்புக் காயங்கள், புண்கள், தோல் உராய்வுகள் என்பன வழியாக மனித உடலுக்குள் இது நுழைகிறது. வயல் களுக்கு அண்மையில் நீர்தேங்கியுள்ள குளம் குட்டைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலைகளில் காணப்படும் பக்ரீரியாவானது கண்களில் உள்ள மென்சவ்வுகள் ஊடாக மனித உடலுக்குள் நுழைகிறது.
இதனால் வயல்களில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு இந்த நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது.அத்தோடு  வேறுதேவைகளுக்காக வயல்களில் இறங்கும் எவருக்கும் இந்த நோய் தொற்றும் அபாயம் காணப்படுகின்றது
எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாக, காய்ச்சல், உளைச்சல் அல்லது உடல் நோதல், தலையிடி, உடல்களைப்பு  அல்லது உடல் அலுப்பு போன்ற பிரதான நோய் அறி குறிகளுடன்  கண் சிவத்தல், சத்தி (வாந்தி) கடும் மஞ்சள் நிறத்தில், சிறுநீர் வெளியேறுதல் சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்,  சிறுநீர் வெளியேறுவது குறைதல் ஆகிய நோய் அறிகுறிகள் இருக்கலாம்.
எனினும் சில நோயாளிகளுக்கு எந்த ஒரு குணம் குறியும் தென்படாதும் காணப்படலாம்.  எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிச்சை பெறவேண்டும் என்றும்  சுகாதாரதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here