மாமனிதர் ரவிராஜின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
467
ravirajமஹிந்த ராஜபக்ஸ அரசின் கைக்கூலிகளினால் கடந்த 2006 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தரை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் 10.11.2016 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.
கட்சியின் நல்லூர் கோட்ட இளைஞர் அணித்தலைவர் மயூரன் தலைமையில்  நிகழ்வுகள் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஷ்ணகுமார் மற்றும் ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர் கோபாலகிருஷ்ணன், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் ஆகியோர் உட்பட பலரும் நினைவுச் சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாமனிதர் ரவிராஜின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்சியின் ஆதரவாளர்களும், பொதுமக்களும்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ரவிராஜின் நினைவுகளை மீட்டி சிறப்புரையினை தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கமும் நிகழ்த்தினர்.
தமிழ்த் தேசிய அரசியலில் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் வகிபாகம்!
யாழ். தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் 1987 ஆம் ஆண்டு கொழும்பு உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக பதிவு செய்து 1989 இல் கொழும்பில் சட்டத்தரணியாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் ‘ரவிராஜ் அசோசியேற்ஸ்’  எனும் சட்ட நிறுவனமூடாக பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைகளில் வாடிய தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக வாதாடினார். மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் தீவிரமாக பணியாற்றினார்.
1998 இல் யாழ். மாநகர  முதல்வராகவும், 2001, 2004 களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இரு தடவைகள் வெற்றி பெற்றவர்.
ஐந்து ஆண்டுகள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காதவை. எப்படி தீவிர அரசியல் பணிகள் இருந்தாலும் மாதாந்தம் சாவகச்சேரியில் உள்ள ராஜ் அகத்தில் திரளும் மக்களை சந்திக்க ஒருபோதும் தவறுவதில்லை. போரால் பெரும் அழிவுக்கு உள்ளாகி இருந்த தென்மராட்சிப் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதில்  அயராது பணியாற்றினார். துன்பப்படும் மக்களுக்கு தானே சென்று உதவுவார், முதியோர், தாய்மார்களிடம் அன்பாக பிரச்சினைகளை கேட்டறிந்து அதனை உரிய முறையில் நிவர்த்தி செய்வார். பிரதேசத்தில் உள்ள கல்விமான்கள், பெரியவர்களின் ஆலோசனைகளையும் செவிமடுத்து செயற்படுவார். இதனால் தான் மக்கள் விரும்பும் தலைவராக அவர் பரிணமித்தார்.
ஆட்கடத்தல்கள், போரினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை போன்ற உரிமை மீறல்களை துணிச்சலோடு தனியொருவனாகவும் அமைப்பு ரீதியிலும் முன்னெடுத்த ஒரு மாமனிதன் இவரே. அப்பாவித் தமிழ் மக்களின் தடுத்து வைப்புக்கான விடுதலை கோரி இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடினார். அத்தோடு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்தத் தொடர்புகளை இன விடுதலைக்காக பயன்படுத்தினார்.
யுத்த காலத்தில் அப்பட்டமாக மனித உரிமை மீறல்கள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையில் தான் இறப்பதற்கு முன்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன் தனது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தெரியப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தையும் இலங்கை இனப்பிரச்சினையின் பால் ஈர்த்தெடுத்தார்.
சரளமாக சிங்களம் பேசக்கூடியவராக இருந்த காரணத்தினால் இனப் பிரச்சினையில் தமிழ் மக்களின் பக்கம் உள்ள  நியாயங்களை சிங்கள தொலைக்காட்சி விவாதங்களுக்கூடாகவும், சிங்கள அரசியல் செயற்பாட்டாளர்கள் ஊடாகவும் பிராந்திய ரீதியாக சிங்கள மக்களிடமும் கொண்டு சென்றார். தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்கள் ஊடாக சர்வதேச ரீதியாகவும் எமது தரப்பு நியாயங்களை எடுத்துச் சென்றார்.
ஊழல் அரசியலை முற்றாக வெறுத்தவர். மக்களுடன் கூட இருந்து பணியாற்றுவதனை பெரு விருப்பாகக் கொண்டவர். இவரைப் போல் ஒரு தலைவர் கிடைக்கமாட்டாரா என தமிழ் மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.   அவரின் மறைவின் பின் சரியான தமிழ் தலைமைத்துவம் இல்லாமல் இன்று வரை தென்மராட்சி மண் தவித்து வருகின்றது.
44 ஆவது வயதில்,  நவம்பர்,10, 2006 இல் கொழும்பில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் வைத்து தமிழ் அரசியல் கட்சி என்கிற பெயரில் இயங்கிய ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here