500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு ஒன்று நேற்று தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.நேற்றில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. இதனால் சாதாரண மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கையில் உள்ள பணத்தை செலவு செய்யவும் முடியாமல், புதிய நோட்டுகளை வங்கியில் இருந்து பெறவும் முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் சீனி அகமது ஐகோர்ட் மதுரையில் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் டிசம்பர் 30ம் தேதி வரை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று உத்தரவிடக் கோரினார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் இதனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தற்காலிகமானதுதான் என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.மேலும், இதுபோன்ற முக்கியமான அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவித்தால் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்குத்தான் சாதகமாக அமையும் என்றும் இந்தியாவில் ஏற்கனவே இதுபோன்று ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதுஒன்றும் புதிதல்ல என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு மீறிய நடவடிக்கை இல்லை என்றும் தனி மனித சுதந்திரத்தை இந்த நடவடிக்கை மீற வில்லை என்றும் நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.