நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி பெற்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் முதன் முறையாக நுழைகின்றனர்.அமெரிக்க வாழ் இந்தியரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை ராஜா கிருஷ்ணமூர்த்தி பெற்றுள்ளார்
ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு 3 வயது இருக்கும் போது அமெரிக்காவிற்கு அவர்களது குடும்பம் குடிபெயர்ந்தது. அங்கேயே வளர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, சட்டப்படிப்பு படித்தார். மேலும், என்ஜினியர் படிப்பையும் படித்து அமெரிக்காவில் தொழில் அதிபாராகவும் வலம் வருகிறார். அரசியலில் ஈடுபட்டு தற்போது பிரதிநிதிகள் சபைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதிபர் ஒபாமாவின் நீண்ட கால நண்பராக இருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காக தீவிரமாக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரைப் போன்றே மற்றொரு இந்திய வம்சாவளியினரான பிரமிளா ஜெயபாலும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1965ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.