பிரான்சில் சிறிலங்காவின் புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்ட கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பருதி ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கோரும் கவனயீர்ப்புப் போராட்டம் 08.11.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு பாராளுமன்றத்துக்கு அருகில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், 08.11.2012 அன்று பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பருதி அவர்களின் திருஉருவப்படம் வைக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு சுடர்ஏற்றப்பட்டது.
அத்துடன், சிறிலங்காவின் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளையும் அத்துமீறல்களையும் கொண்ட ஆதார புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கடும் குளிருக்கு மத்தியிலும் கைகளில் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் பதாகைகளைத் தாங்கியும் தமது கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பாலசுந்தரம் அவர்கள் நிகழ்வுரை ஆற்றினார்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களும், குர்திஸ்டான் மக்களும், மனிதநேய செயற்பாட்டாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் போராட்டம் நிறைவடைந்தது.