
சிறிலங்காவில் சூழல் வழமைக்கு வந்திருக்கிறது, ஜனவரி 2015 இக்கு பின் மைத்திரிபால சிறிசேனா ஆட்சிக்கு வந்த பின்பும், ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தல் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா மற்றும் ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியை பெற்றதும், இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் ஆதரவை தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை பெற்றதன் அடிப்படையில், சிறிலங்காவில் சுமூக நிலை ஏட்பட்டு நல்லாட்சி நடப்பதாக சிறிலங்கா அரசு சர்வதேசத்துக்கு கூறிக்கொண்டு வருவதை நாம் அறிவோம்.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதவுரிமை நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் ” புலம்பெயர் நாடுகளில் சிறி லங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் செயல்பாட்டாளர்கள், மற்றும் விடுதலை புலிகள் அமைப்பில் முக்கிய பதவிகளில் இருந்தவர்களுக்கு மட்டும் தான் இன்றைய சூழலில் பாதுகாப்பு இல்லை என்பதை” தீர்ப்பாக அளித்துள்ளது.
இந்த நிலையில் பிரான்சில் அகதி அந்தஸ்தை அளிக்கும் நிறுவனங்கள், தமிழ் மக்களுக்கு சட்ட பாதுகாப்பு மற்றும் அகதி அந்தஸ்தை நிறுத்துவதற்கு சிந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு அவர்களின் அகதி அந்தஸ்து கோரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டு கொண்டு இருப்பதை நாம் நேரடியாக காணுகிறோம்.
இந்த அடிப்படையில் இனியும் தமிழ் மக்களுக்கு அகதி அந்தஸ்த்து அளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் முகமாக வரும் நவம்பர் மாதம் 17 ஆம் காலை 9 மணிக்கு Cour Nationale de Droite l ‘asile, 35 Rue Cuvier, 93100 Montreuil யில் அமைத்துள்ள நீதிமன்ற வளாகத்தில், அறை 1 மற்றும் 2 இல் பல நீதவான்கள் முன்னிலையில் ஆய்வு நடைபெறுகிறது.
சிறிலங்காவில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தும் முகமாக பிரஞ்சு வழக்கறிஞர்கள் தமது கருத்துக்களை பல சாட்சியாட்கள் ஊடாக முன்வைக்க இருக்கிறார்கள்.
இந்த அமர்வு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் அந்தஸ்து விடயத்தில் பிரான்சு நாட்டின் நிலை பாட்டை மாற்றக் கூடியதாக அமையலாம்.
பிரான்சில் இனி வரும் காலத்தில் அகதி அந்தஸ்து கோரி இருப்பவர்கள், கோரி நிராகரிக்கப்பட்டு மீள் விசாரணைக்கு அளித்துவிட்டு இருப்பவர்கள், மற்றும் இப்போது அகதி அந்தஸ்து கோருபவர்கள் எல்லோரினதும் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் அமர்வாக இது அமையப்போகிறது.
இந்த சூழலில் அகதி அந்தஸ்து கோருவோர், இந்த அமர்வின் போது மேல் குறிப்பிட்ட நீதி மன்றத்துக்கு சென்று, எமக்கு நாட்டில் தொடர்ச்சியாக பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டியது எமது கடமை.
ஆகவே இந்த முக்கிய சூழலை புரிந்துகொண்டு எல்லோரையும் நவம்பர் 17 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு செல்லும் படியம் இந்த அமர்வில் பங்கு பற்றும் படியும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்கள் எல்லோரினதும் வருங்காலத்தை நிர்ணயிக்க போகும் அமர்வாக அமையும் என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறோம்.