யாழ்ப்பாணம் மாநகரசபையின் திட்டமிடல் கிளையில் பணிபுரியும் பெண் பணியாளரினால் ரூபா 17 இலட்சம் பணம் மோசடி மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மாநகர சபையின் திட்டமிடல் கிளையின் கீழ் புதிய கட்டிட அனுமதி மற்றும் பல்வேறு அனுமதிகளிற்காக வழங்கப்படும் படிவங்கள் மற்றும் அறவீடுகளின்போதே குறித்த பண மோசடி இடம்பெற்றமை கண்டறியப் பட்டுள்ளது.
இவ்வாறு மோசடி இடம்பெற்றமை தொடர்பில் கண்டறியப்பட்டதனையடுத்து நிர்வாக ரீதியில் இருப்பு கணக்கிடப்பட்டபோது குறித்த ஊழல் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்ட சிரேஷ்ட பெண் உத்தியோகத்தர், ஓர் முக்கிய அதிகாரியின் நெருங்கிய உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மாநகர சபையினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மாநகரசபை ஆணையாளர் வாகீசணைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
மேற்படி விடயம் தொடர்பில் கண்டறியப் பட்டதும் நிர்வாக ரீதியிலும் சட்டரீதியிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் கண்டறியப்பட்டு 3 தினங்களே ஆன நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக திணைக்கள ரீதியில் உரியமுறையிலான சகல ஏற்பாடுகளும் மேற்கொளள்ளப்பட்டு வருகின்றன என பதிலளித்தார்.