
தனிச் சிங்களத்தில் ஆளுநரால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்தக் கடிதத்தின் ஊடாக, ஆளுநர் எதனைக் கூற வருகின்றார் என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிடடுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கையின் அரச கரும மொழிகளாக சிங்களமும், தமிழும் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் வடமாகாண ஆளுநர் அலுவல கத்திற்கு முன்னால் முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் இறுதியில், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினால், மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு கண்டனம் வெளியிட்டும், நீதி கோரியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி களிலும் எழுதப்பட்ட மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
இந்த மகஜர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள வடமாகா ண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கு மாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு கிடைத்த நிலையில், உடனடியாக அந்தப் பிரதியை ஆளுநருக்கே மாணவர்கள் திருப்பி அனு ப்பி வைத்துள்ளனர்.
தனிச் சிங்கள மொழியில் மாத்திரமே இருந்த இந்த கடிதத்தின் உள்ளடக்கங்கள் தமக்கு புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள கலைப்பீட மாணவர் ஒன்றியம், நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் எனக் குறிப்பிட்டும் வட மாகாண ஆளுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆளுநரின் கடிதத்திலேயே ஆங்கிலத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பி திருப்பி அனுப்பியிருந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் அமைப்பின் தலைவர் கே. ரஜீவன் தெரிவிக்கையில், தங்களுக்கு புரியாத மொழியில் எழுதப்பட்ட கடிதத்தை எதற்காக ஆளுநர் தங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, நாட்டில் அரச கரும மொழிகளாக தமிழும், சிங்களமும் இருக்கும் நிலையில் தனிச் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதமொன்றை தமக்கு அனுப்பி வைத்ததாலேயே தாங்கள் அதனை திருப்பி அனுப்பியதாகவும் யாழ் .பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் அமைப்பின் தலைவர் கே. ரஜீவன் குறிப்பிட்டார்.