தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் செயற்பட்ட வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவக ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 26.10.2016 புதன்கிழமை அன்று பாரிசில் பந்தன் பகுதியில் அவர்களின் நினைவுக் கல்லறையில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர திரு.சத்தியதாசன் ஏற்றிவைத்தார். கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை அவர்களின் சகோதரர்கள் ஏற்றிவைத்து மலர் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர். துயிலும் இல்ல பாடல் ஒலித்தபோது, அனைவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தன.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் நினைவுரை ஆற்றினார்.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு கண்டன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு (படங்கள்: நிக்சன்)