யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் மூலம் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் அவர்களின் இழப்புக்கு நீதி கோரியும் இன்றைய தினம் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு வேளையில் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து காலை-06 மணி முதல் மாலை-06 மணி வரை வடக்கு மாகாணத்திலுள்ள சகல வர்த்தக நிறுவனங்கள், வியாபார நிலையங்கள் அனைத்தையும் பூட்டி, பாடசாலைகள், நீதிமன்றங்கள் உட்பட அலுவலகங்கள் அனைத்தையும் புறக்கணித்து, போக்குவரத்துச் சேவைகளையும் புறக்கணித்து முழுவதுமாக வடக் கில் ஒரு பூரண ஹர்த்தால் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற வேண்டும் என தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன.
அந்த வகையில் இன்றைய தினம் வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு வர்த்தக சங்கங்களும், தனியார் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டாம் என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சும் கோரியுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் வடக்கு முழுவதும் பூரண கடையடைப்பு இடம்பெறவுள்ளதுடன் அனைத்து தரப்பும் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பேருந்து சங்கங்கள் மற்றும் வணிகர் கழகங்கள், வடமாகாண கடற்தொழில் சங்கங்களின் சம்மேளனம், வடக்கில் உள்ள அனைத்து பொது அமைப்புக்கள், சங்கங்கள் என பல தரப்பட்ட தரப்பினரும் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.
இதே போன்று அரச பணியாளர்கள், வங்கி நிறுவனங்கள் என சகல திணைக்களங்களும் மாணவர் கொலையை கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இடம்பெறும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க வேண் டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் காலங்களில் அரச பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தமிழ் மக்களின் உயிர்களை பறித்த வண்ணமே உள்ளன. ஆயுதம் தாங்கிய பொலிஸார் வீதிகளில் நின்று பல்கலைக்கழக மாணவர்களை துப்பாக்கி யால் சுடுவது என்பதை சாதாரணமாக கருத முடியாது. சமாதான காலத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் பொலிஸாருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டதாக எந்த ஒரு சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை.
இந்த நிலையில் பொலிஸார் தமக்கு உயிர் ஆபத்து இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த மாணவர்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காது, கொலை செய்தமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன் றாகும். இந்நிலையில் மாணவர்களின் படுகொலைக்கு ஒட்டுமொத்த தமிழினமும் நீதி கோர வேண்டும்.
அரச பயங்கரவாதம் மீண்டும் வடக்கு மண்ணில் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது என்ற தீர்மானத்துடனும், வைராக்கியத்துடனும் இன்றைய தினம் வடக்கு மாகாணம் முழுவதிலும் முன்னெடுக்கப்படுகின்ற பூரண ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன மற்றும் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் கோரியுள்ளன.