மாணவர்களின் உடல்கள் அடக்கம் சுலக்சனின் இறுதிக்கிரியை நேற்று!

0
246

12154பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான மாணவர்களில் ஒருவரான விஜயகுமார் சுலக்சனின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் நடைபெற்று அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 

யாழ். கொக்குவில் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சுன்னாகம்  கந்தரோடைப் பகுதியினைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் (வயது 24), கிளிநொச்சி – இரணைமடுப் பகுதியினைச் சேர்ந்த நடராஜா கஜன் (வயது 23) என்னும் இரு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர். இதில் கிளிநொச்சி மாணவனான கஜனின் இறுதி கிரியைகள் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது. இதன் போதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த இரு மாணவர்களின் இறுதிக்கிரியைகளின் போதும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேலைக்கு சென்று கொண்டேபடித்த எம்மகன்கள் இப்போது படிப்பதற்கு உயிருடன் இல்லையே என்று கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதே போன்று தம்மோடு சிரித்து உறவாடிய தமது நண்பர்கள் தம்மை விட்டு சென்றுவிட்டார்களே என  மாணவ மாணவிகள் 
கதறி அழுதது அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவைத்தது.

துப்பாக்கியினால் சுடுவதற்கு எங்கள் நண்பர்கள் பறவைகளா? என ஆவேசத்துடன் சில மாணவர்கள் தமது கைகளை நிலங்களில் குத்தி விரக்தியுடன் கதறி அழுதார்கள். இதனால் இரு மாணவர்களது இறுதி கிரியைகளும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.மாணவர்களின் இருதிக்கிரியைகளிற்கு முன்னர் கிளிநொச்சியிலும் யாழிலும் அமைதி வழி போராட்டங்களும் இடம்பெற்றன. இந்த இரு இறுதிக்கிரியைகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் பல கட்சிகள் ஆகியன கலந்து கொண்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here