யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில் அவர்கள் நேற்றிரவு 15.10.2016 காலமாகிவிட்டார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
கோர விபத்தால் ஆசிரியரின் இரு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் ஒரு கால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் அதனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
பின்னர் இரத்தம் ஏற்ற மருத்துவர்கள் முற்பட்ட வேளை அவரின் சில உறவுகள் மற்றும் மதப் பெரியவர்கள் அதனை மறுத்து, தங்கள் மதத்தில் இவ்வாறான செயற்பாடுகளை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.
ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் பட்சத்தில் அவரது மதமோ, இனமோ, கலாச்சாரத்தையோ தாங்கள் கவனத்தில் கொள்வதில்லை என்றும். உயிரை எப்படியாவது காப்பாற்றுவது தான் தமது இலக்கு எனவும் சிகிச்சையளித்த மருத்துவர்கள் விடாப்பிடியாக நின்றுள்ளனர்.
ஆசிரியருக்கு இரத்தம் ஏற்ற வேண்டுமென மருத்துவமனைக்கு சென்ற சக ஆசிரியர்களும், மாணவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், மதப் பெரியவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாக இருந்துள்ளனர்.
இரத்தம் ஏற்றுவது தவிர்ந்த ஏனைய சில அவசர சிகிச்சைகளுக்கும் கூட குறித்த மதப் பெரியவர்கள் தடை போட்டுள்ளனர்.
தேவையான குருதி ஏற்றப்பட்டு ஆசிரியர் உயிர் பிழைத்திருந்தால் இன்னும் பல்லாயிரம் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி இருப்பார்.
கடந்த இரு வாரங்களுக்குள்ளாக சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் மதத்தின் பெயரால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதங்கள் மனிதனை வாழ வைக்கவே அன்றி சாகடிக்க அல்ல.
ஆசிரியரின் மனைவியும் கோமா நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
வணிகக் கல்வியை அழகான கதை போல தனக்கே உரித்தான கம்பீர பாணியில் படிப்பிக்கும் நல்ல தோழனாக, பெற்றோராராக, நல்லாசிரியராக மாணவர்களுக்கு அருகில் எப்போதும் இருந்து அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும் கூறி அவர்களை ஊக்குவித்து கல்வி புகட்டும் அந்த பேராசானின் மறைவை ஈடு செய்வதென்பது நிச்சயம் முடியாத காரியம்.
ஆசிரியர் பசில் அவர்களின் இறுதிச் சடங்கு நாளை கொழும்புத்துறையில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற உள்ளது.