நாட்டில் வரட்சியுடன் கூடிய கால நிலை தொடர்ந்து நீடித்து வருவதால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ அமைச்சின் மையத்தினால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி ஒரு வார காலத்திற்குள் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கையில் 87 சத வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
17 மாவட்டங்களில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு இலட்சத்து 39 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்து 20 ஆயிரம் பேர் என இடர் முகாமைத்துவ மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண ரீதியான தரவுகளில் கிழக்கு மாகாணத்திலும் மாவட்ட ரீதியான தரவுகளில் அம்பாறை மாவட்டத்திலும் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு , அம்பாரை மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரம் 63 குடும்பங்கள் ( 1 இலட்சத்து 33 ஆயிரத்து 313 பேர் ) என இடர் முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
அம்மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 605 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 636 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 591 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கு அடுத்ததாக பொலநறுவ மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட வட மத்திய மாகாணத்திலும் பாதிப்புகள் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 29 ஆயிரத்து 634 குடும்பங்களைக் கொண்ட 1 இலட்சத்து 32 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது குடி நீர் தட்டுப்பாடு நிலவுவதால் குடி நீர் விநியோகம் மற்றும் ஏனைய அவசர தேவைகளுக்காக 1 கோடியே 81 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறுகின்றார்.
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடி நீர் விநியோகம் இடம் பெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.