தமிழ்த் தேசிய திருநாளாம் தைப்பொங்கல் நாளில், தமிழ் மக்களின் தேசிய வாழ்வை நிலை நிறுத்த உறுதியேற்போம் என்று தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் காலநதியில் உலகமானது பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்திருக்கிறது. பல்லாயிரம் ஆண்டு நெடிய வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள தமிழர்கள் நாம் , கால ஓட்டத்தில் எந்த நிர்ப்பந்தங்கள் வந்த போதும், எமது தேசிய வாழ்வைக் காத்து வந்திருக்கின்றோம். அந்த வகையில் தமிழர்களின் தேசிய வாழ்வியல் அடையாளமாக விளங்குகிற இப்பண்டிகையில் உங்களுடன் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். உணவளித்த இயற்கைக்கும், உடன் உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி சொல்லிக் கொண்டாடப்படும் இத்தைப்பொங்கல் திருநாளில் அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உலகின் சக்திவாய்ந்த சிறுபான்மையினராகவும், தீர்மானிக்கும் அரசியல் சக்தியாகவும் ஈழத்தமிழினம் மீண்டும் ஒரு முறை உலகிற்கு தன்னை வெளிபடுத்தியுள்ளது. வெற்றியும் மகிழ்ச்சியும் எம் மண்ணில் நிரந்தரமாவதற்கு எமது தேசிய வாழ்வைத் தொடர்ந்து காத்து நிற்பது அவசியமாகும்.
உலகின் மிகச் சிறந்த நாகரீகத்தை வெளிப்படுத்துகிற இத்திருநாளில் எத்தனை தடைகள் வரினும் எங்களின் தேசிய வாழ்வை நிலை நிறுத்த உறுதியேற்போம்என்றார்.