தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு இன்று நேரில் வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
தில்லியில் இருந்து தனி விமானத்தின் மூலம் சென்னை வந்த ராகுல்காந்தி, வெள்ளிக்கிழமை காலை 11.45 மணியளவில் க்ரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவரது வருகையை ஒட்டி மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
மருத்துவமனைக்குள் சென்ற ராகுல் காந்தி சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய ஆதரவையும் காங்கிரஸ் கட்சித் தலைவரின் ஆதரவையும் முதல்வருக்குத் தெரிவிக்கவே வந்ததாகக் கூறினார்.