சுவிற்ஸர்லாந்திலுள்ள ஈழத் தமிழர்களை நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டாமென வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனிற்றா சொமறுகா இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் சுவிற்ஸர்லாந்தில் இருந்து ஈழ அகதிகளை நாடுகடத்துவது தொடர்பிலேயே தமது விஜயத்தில் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை சுவில் அமைச்சரை சந்தித்த வடக்கு முதல்வர் இலங்கையர்களை திருப்பியனுப்புவதற்கு உசிதமான சூழ்நிலை தற்போது இலங்கையில் இல்லையெனவும் அவர்கள் திருப்பியனுப்பப்பட்டால் கைது செய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டாலும் கூட அதற்கு ஒப்பான சட்டமொன்று மீள உருவாக்கப்படாதென்ற எந்த நிச்சயமும் இல்லையென்றும் வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையர் நாடு திரும்ப வேண்டும் என்பதே தமது விரும்பம் என தெரிவித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் எனினும் அதற்கான சூழ்நிலை நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.