இனரீதியான பாகுபாடுகள் தொடர்ந்துவரும் நிலையில் முன்வைக்கப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் சுவிட்ஸர்லாந்தின் நீதி அமைச்சர் சைமனேட்டா சொமாருகாவை நேற்று யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
மாறிமாறி ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் பாகுபாடுகளைத் தொடர்ந்து வந்தன. 1948ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் ஆட்சியில் நாம் சகலரும் சமமாக நடத்தப்பட்டோம். பரீட்சைகள் உள்ளிட்ட சகலவற்றிலும் நாம் சமமாக போட்டியிட்டோம். பாகுபாடு இல்லாவிட்டால் சமமாக எம்மால் போட்டியிட முடியும்.
எனினும், 1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் இன ரீதியான பாகுபாடு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்தான கல்வி தரப்படுத்தல்களால் தமிழ் மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாது போனது. இவ்வாறான பாகுபாடுகள் இன்னமும் தொடர்கின்றன.
இத்தகைய பின்னணியில் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உண்மையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவர் என்ற நிலைமையை பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால் அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும்.
அதேநேரம், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனினும், இது இன்னமும் செய்யப்படவில்லை. நாட்டில் 17 பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் உள்ளன. ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறான சில சம்பவங்கள் குறித்து பதிவாகியுள்ளன.
முன்னரைவிட நாட்டில் நிலைமைகள் மாறியுள்ளன. தற்பொழுது ஜனநாயகம் உள்ளது. கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தபோதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலிருந்து இளைஞர்கள் விடுவிக்கப்பட்டாலே தீர்வொன்று கிடைக்கும்.
மேலும் வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாகக் காணப்படுகின்றது. யாழ் குடாநாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் உள்ளனர். இவர்கள் தற்பொழுது ஓரளவுக்கு அடக்கிவைக்கப்பட்டுள்ளபோதும், அவர்கள் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பிடித்துவைத்திருப்பதுடன், அதில் விவசாயங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனைக் கேட்பதற்காகவே கடந்த வாரம் நாம் பேரணியை நடத்தியிருந்தோம்.
நாம் நடத்தியிருந்த பேரணியானது அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல. அரசியல் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக சிவில் சமூக அமைப்புக்கள் இருப்பது வழமையானது. அவ்வாறானதொரு அமைப்பின் ஊடாகவே தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டியிருந்தனர் . புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்ற விடயத்தை தெரிவித்தேன் என்றார்.