நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சியசாலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிறிய ரக விமானத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மகனான யோசித்த ராஜபக் ஷவுக்கு பரிசாக தான் வழங்கியதாக பிரபல திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னம் வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம ளவில் தான் அதனை அவருக்கு வழங்கியதாகவும் அதன் பின்னர் அந்த விமானம் தொடர்பில் தனக்கு எவ்வித தகவல்களும் தெரியாது எனவும் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் திரைப்பட இயக்குனர் வழங்கியுள்ள வாக்கு மூலத்தை பொலிஸார் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகவும் இது தொடர்பிலான விரிவான விசாரணையொன்றை நடத்தும் பொறுப்பு கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழான விசேட குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த விமானம் எப்படி அந்த இடத்துக்கு வந்தது? அந்த விமானத்துக்கு சிவில் விமான சேவைகள் அதிகாரியின் அனுமதிப்பத்திரம் உள்ளதா? விமானத்தின் சொந்தக் காரர் யார்? நேற்று முன்தினம் மாலை நால்வர் வந்து வேன் ஒன்றில் அதனை எடுத்துச் செல்ல முற்பட்டனர், ஏதேனும் செயற்பாடுகளுக்கு அந்த விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து இந்த விசாரணைகளின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் கீழ் இடம்பெறும் இந்த விசாரணைகளுக்கு உதவும் விதமாக விமானம் மீட்கப்பட்ட இடமான நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் விமானமும் அங்கேயே வைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்வதாகவும் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் குறித்த களஞ்சியசாலைக்கு இரத்மலானையை சேர்ந்த ஏசியன் எயார் சென்டர் என்ற தனியார் விமான ஓட்டுநர் பயிற்சி நிலையம் ஒன்றை சேர்ந்த நால்வர் நாரஹேன்பிட்டியிலிருந்து குறித்த விமானத்தை கொண்டு செல்ல முனைந்துள்ளனர். இந்த விமான ஓட்டுநர் பயிற்சி நிலையமானது திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னத்துக்கு சொந்தமானதாகும்.
எனினும் விமானம் ஒன்றினை சிலர் கடத்த முயற்சிப்பதாக 119 தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ள ஒருவர் நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்திலிருந்து விமானம் ஒன்றை இரத்மலானை பகுதியை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சிலர் எடுத்துச் செல்ல முற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த தகவலானது நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறித்த இடத்துக்கு சென்ற நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு அந்த விமானத்தை மீட்டுள்ளது.
பொலிஸார் அங்கு செல்லும் போது அந்த விமானத்தின் சிறகுகளை சிலர் கழற்றிக்கொண்டிருந்துள்ளனர். இதன் போதே பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே குறித்த சிறிய ரக விமானமானது இருவர் பயணிக்கக் கூடியதாகும்.
இந் நிலையிலேயே விமானத்தை எடுத்துச் செல்ல வந்த நிறுவனத்தின் உரிமையாளரான சந்திரன் ரத்னத்திடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் நேற்று முன்தினம் மாலை குறித்த விமானத்தை பாகங்களாக பிரிக்க உதவுமாறு தம்மிடம் நபர் ஒருவர் கேட்டதற்கிணங்கவே அங்கு தமது ஊழியர்கள் நால்வரை அனுப்பியதாக குறிப்பிடும்
திரைப்பட இயக்குனர், வேறு நோக்கங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே இந்த விமானமானது உள் நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் அதனை பேராசிரியர் ரே விஜேவர்த்தன தயாரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அனைத்து தகவல்களினதும் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னர் விசாரணை நிறைவடையும் போது உண்மையான தகவல்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.