யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் நாட்டில் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்ற நிலையில் இன்றைய தினத்தில் இதற்கான உறுதி மொழியினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சர்வதேச சிறுவர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. தேசிய சிறுவர் தின வைபவமானது இன்று காலை 9.30 மணிக்கு கேகாலை சென். ஜோசப் மகளிர் கல்லூரி மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையில் நடைபெறுகின்றது.
இன்றைய தினமானது சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில் சிறுவர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம் பெற்ற யுத்தத்தில் சிறுவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருந்தனர். இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான சிறுவர்கள் அநாதரவாக்கப்பட்டனர். வடக்கு, கிழக்கில் யுத்தத் தினால் தாய், தந்தையரை இழந்த 9 ஆயிரம் சிறுவர்கள் சிறுவர் இல்லங்களிலும், காப்பகங்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பெருமளவான சிறுவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவானோர் அங்கவீனர்களாகியுள்ளனர். உடல்களில் ஷெல் துகள்களை சுமந்தவண்ணம் சிறுவர்கள் வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சிறுவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவேண்டியது எமது கட மையாக உள்ளது. இதற்காக எமது அமைச்சின் மூலமும் அரசாங்கத்தின் மூலமும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளது.
இதேபோல் வடக்கு, கிழக்கில் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலினால் பெருமளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான பாதிப்புக்களிலிருந்து அவர்களை மீட்கவேண்டியுள்ளது. பாடசாலைகளில் கூட பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றமை கவலையளிக்கும் விடயங்களாக உள்ளன.
இவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பாதிப்புக்களிலிருந்து அவர்களை மீளச் செய்வதற்கும் நாம் இன்றைய தினத்தில் உறுதி பூணவேண்டும். உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற சிகிச்சைகள் வழங்கப்படவேண்டும். இவ்விடயம் குறித்தும் நாம் அவதானம் செலுத்தி வருகின்றோம்.
எதிர்காலத்தில் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது. இதற்கான உறுதியினை நாம் எடுத்துக்கொள்வோம் என இராஜாங்க அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.