கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்!

0
658

eelam01100004தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை.

ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந்தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி ‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.

சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.

இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.

1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக ‘சயனைட்’ அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.

col-shankar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here