தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை மூடாவிடில், மூடுகிற நிலையைத் தமிழ்நாட்டில் தாய்மார்களும், மாணவர்களும் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கத் தைப் பொங்கல் நாளில் சபதம் ஏற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச்செய்தி: பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்கள் தங்களுக்குத் தேவையான தானிய மணிகள், காய்கறிகள், கனிகள் அனைத்தையும் மழை நீராலும் பாய்ந்தோடும் நதிகளாலும் தந்திட்ட அந்த நிலத்தையும், அந்நிலத்தில் உழுது நீர்பாய்ச்சி வேளாண்மை செழிக்க உதவிய எருதுகள் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளையும் நன்றியுடன் பூசை செய்து வழிபட்டு கொண்டாடி மகிழும் தமிழர்களின் தேசியத் திருவிழாதான் தைப் பொங்கல் திருவிழா ஆகும்.
நெல் தந்த அரிசியை, கரும்பு தந்த சர்க்கரையை, பசுக்கள் தந்த நெய்யை இணைத்து மங்கல மங்கையர் தந்த சர்க்கரைப் பொங்கலை இல்லத்தினர், உற்றார் உறவினரோடு உண்டு மகிழ்ந்து உவகையில் திளைக்கும் இன்பநாள்தான் பொங்கல் திருநாள்.
இந்த ஆண்டுப் பொங்கலோ வித்தியாசமானது. காலம் காலமாகத் தமிழகத்தை வாழ வைத்த காவிரி நதி பொங்கிப் பிரவகித்துத் தரும் நதி நீரை முற்றாகத் தடுத்து தஞ்சைத் தரணி உள்ளிட்ட 12 மாவட்டங்களைப் பஞ்சப் பிரதேசம் ஆக்கும் வஞ்சக நோக்குடன் கர்நாடக அரசு சட்டவிரோதமாகக் காவிரிக்குக் குறுக்கே மேகதாட்டு, தாது மணலில் இரு அணைகளையும் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர் என மேலும் நான்கு தடுப்பு அணைகளையும் கட்டி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு விரோதமாக 11 இலட்சம் ஏக்கருக்குப் பாசனம் செய்ய கச்சைக் கட்டிக் கொண்டு அக்கிரமக் காரியம் ஆற்றிட பக்கத் துணையாகச் செயல்பட்டு தமிழகத்திற்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைக்கிறது மத்திய அரசு.
தஞ்சைத் தரணியையும் சிவகங்கைப் பூமியையும் நிலம், நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நாசமாக்கிட மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஏவியுள்ளது மத்திய அரசு தேனி மாவட்டத்தை நரகத்தில் தள்ளும் நோக்கத்தோடு நியூட்ரினோ திட்டத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு. கொங்கு மண்டலத்தில் அமராவதிக்கு வரும் தண்ணீரைத் தடுக்க அணைகட்டத் தொடங்கி விட்டது கேரள அரசு.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கே உலைவைக்கும் எமனாக முற்றுகையிட முனைந்து விட்ட இந்த அபாயங்களைத் தடுத்து நிறுத்தி சூழும் கேடுகளைத் தகர்த்து எறிய அரசியல் கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழக மக்கள் அறப்போர்க்களம் காண சூளுரைக்கும் பொங்கலாக இத் தைப் பொங்கல் அமையட்டும். வளரும் தலைமுறையின் வாழ்வைப் பாழாக்கி வரும் மது அரக்கனைத் தமிழ்நாட்டில் இருந்து விரட்டிட இந்த ஆண்டு இறுதிக்குள் மாநில அரசு மதுக்கடைகளை மூடாவிடில், மூடுகிற நிலையைத் தமிழ்நாட்டில் தாய்மார்களும், மாணவர்களும் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கத் தைப் பொங்கல் நாளில் சபதம் ஏற்போம். நான் உயிருக்கும் மேலாக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், ஈழம் உள்ளிட்ட தரணி வாழ் தமிழர்களுக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.