எம் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! நேற்றைய தினம் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி கண்டு இதயம் நெகிழ்ந்து போயுள்ளது.
வரலாறு காணாத எழுச்சியைக் கண்டு உள்ளம் நெகிழாதார் எவரும் இருக்க முடியாது.
அந்தளவுக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் உணர்வு பூர்வமாக பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் எழுச்சியை மனித மொழிகளில் எடுத்தியம்புவது முடியாத காரியம். இது ஆத்மார்த்தமாக உணரப்பட வேண்டியது.
எங்கள் உரிமைக்காக நாம் குரல் கொடுக்க தயங்கமாட்டோம் என்பதை ஒன்று திரண்ட தமிழ் மக்கள் இந்த நாட்டிற்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்தியம்பியுள்ளனர்.
வட மாகாணம் முழுவதிலும் வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள், சந்தைகள் பூட்டப்பட்டு பேரணிக்கு வழங்கப்பட்ட ஆதரவு கண்டு ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைவிட வேறு எதைத் தான் செய்ய முடியும்!
ஒரு பெரும் எழுச்சிப் பேரணி கண்ட மனத்திருப்தியில் எங்கள் இனம் வாழும்; எங்கள் இனம் தழைக்கும்; எம் உயிரிலும் மேலான தமிழ்மொழி என்றும் ஒலிக்கும் என்ற அசையாத நம்பிக்கை ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை தமிழ் மக்களின் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி கண்டு யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இந்த எழுச்சிப் பேரணியில் தமிழ் வாழும்; தமிழினம் வாழும் ஆகையால் இது தமிழ் மக்களின் உரிமையை, பூர்வீக தாயகத்தை எமது பண்பாட்டு விழுமியங்களை வலியுறுத்துவதற்கானது.
இந்தப் பேரணி யாருக்கும் எதிரானதல்ல. இது தமிழ் மக்கள் தங்கள் உரிமையை வலியுறுத்துவதற்கானது.
எனவே தென்பகுதி ஊடகங்களே! ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்களே! தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாமே! என்ற நினைப்புடன் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் தரப்புகளே! நீங்கள் யாரும் இந்தப் பேரணியை மாற்றுக்கண் கொண்டு பார்க்காதீர்கள்.
இந்தப் பேரணி இலங்கை மண்ணில் சாந்தி சமாதானம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கானது.
அழகிய இலங்கைத் தீவில் பேரினவாதமே தொடர்ந்தும் பேசப்படுமாக இருந்தால் அது அழிவுக்கே வழிவகுக்கும்.
அழிவு என்பது தமிழ் மக்களுக்கானது என்று மட்டும் யாரும் நினைத்துவிடாதீர்கள். தர்மமே வெல்லும் என்பதுதான் இந்த உலகில் உள்ள அத்தனை சமயங்களினதும் அடிப்படைத் தத்துவம்.
போரில் தோற்றவனைவிட வென்றவனுக்கே அதிக துன்பம் என்று கூறியவர் கெளதம புத்த பிரான்.
ஆகையால் துன்பமும் அழிவும் என்றும் ஒரு தரப்புக்கே இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.
ஆகையால்தான் சொல்லுகிறோம்; தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது இலங்கைத் தீவை ஆக்கத்தின் வழிக்கு இட்டுச் செல்வதாகும்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் அதனை வலியுறுத்துவது தமிழ் மக்களின் கடமை.
அந்தக் கடமையை தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணியாக உலகுக்கும் இந்த நாட்டின் ஆட்சிப் பீடத்தினருக்கும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இதனை அகிம்சை வழியில் நடந்த நீதியான போராட்டமாக கருதி தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசும் சர்வதேச சமூகமும் நிறைவேற்றி வைக்க வேண்டும். இதுவே இந்தப் பேரணியின் நோக்காகும்.
(valampuri)