எங்கள் தமிழகத்து சகோதரர்களுக்கு; கர்நாடக மாநிலத்தில் எம் தமிழ் சகோதரர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி அறிந்த நெஞ்சம் பதறுகிறது. உங்கள் உடலில் விழுகின்ற ஒவ்வொரு அடியும் எங்களுக்கு வலி தருவன.
எங்களுக்காக குரல் கொடுக்கின்ற எம் தமிழகத்து சகோதரர்கள் எந்த துன்பத்துக்கும் ஆளாகாமல் இருந்தாலே அது ஈழத் தமிழினத்தின் மிகப் பெரும் பலம் என்ற நினைப்போடு வாழ்கின்றவர்கள் நாம். இந்த நினைப்புக்கு எந்தப் பழுதும் வந்திடலாகாது என்றிருந்த வேளையில், கர்நாடக மாநிலத்தில் எம் தமிழகத்துச் சகோதரர்கள் தாக்கப்படுகின்றனர் என்ற தகவல் எம் நெஞ்சை பதற வைத்துவிட்டது.
இப்படியயாரு நிலைமை எதற்கானது? அரசியல் சூழ்ச்சிகள் இதற்குள்ளனவா? என்ற கேள்விகளின் மத்தியில் உங்கள் மீது நடந்த தாக்குதலை ஈழத் தமிழ் மக்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். இந்தக் கண்டனம் சம்பிரதாயமானதன்று. இது ஆத்மார்த்தமானது.
நாங்கள் துன்பப்பட்டபோது தங்கள் உயிரையே துச்சமாக மதித்து தங்கள் உடலை எரியூட்டி உலகமே! என் ஈழத் தமிழ்ச் சகோதரர்களைக் காப்பாற்று! என்று அறைகூவிய தமிழகத்து உடன்பிறப்புக்கள் இன்று கர்நாடகாவில் தாக்கப்படுகின்றனர் எனும்போது, இந்த வலியை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
அன்புக்குரிய தமிழகத்து சகோதரர்களே! வந்தேமாதரம் என்ற கோசத்தோடு பாரத தேசம் முழுவதும் ஒரு கணப்பொழுதில் ஒன்றுபடுகின்ற மிகப் பெரும் ஒற்றுமை கொண்டது உங்கள் இந்திய தேசம்.
இந்தப் பெருமை என்றும் நிலைக்க வேண்டும். உங்கள் மாநிலத்து மக்கள் தொகையின் ஒரு சிறு பகுதியாகிய எங்கள் இலங்கை நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற இனங்களே இன்று வரை வாழ்ந்து வருகின்றன.
ஆனால் நூறு கோடி மக்கள் தொகையை கடந்து நிற்கும் இந்திய தேசத்தில் இந்தியர்களே வாழ்கின்றனர் என்ற உண்மையை நாம் நன்கு அறிவோம்.
ஆகையால் கர்நாடக மக்களும் தமிழகத்து சகோதரர்களும் எப்பாடுபட்டேனும் ஒற்றுமையாக வாழவேண்டும்.
முன்னைய ஒற்றுமையை மீளநிறுத்தவது அவசியமாகும். வன்முறைகள் ஒருபோதும் தீர்வாகாது என்பதை கர்நாடக மக்களுக்கு எடுத்துக்கூறுவது உங்களின் கடமை.
தாக்குதலுக்கு தாக்குதலும் வன்முறைக்கு வன்முறையும் என்றால் இந்தத் தேசம் ஒருபோதும் அமைதியாக வாழ முடியாது.
இந்தச் செய்தியை வன்முறையும் பேரினவாதமும் தாண்டவமாடிய இலங்கைத் தீவிலிருந்து சொல்கிறோம்.
ஆகவேதான் அன்புக்குரிய தமிழகத்து சகோதரர்களே! உங்கள் மீது விழுந்த அடி எங்கள் மீதும் விழுந்தது. ஆயினும் நீங்கள் பொறுமையை கடைப்பிடியுங்கள். உங்களின் பொறுமை இன்னும் சில வருடங்களில் இந்திய மாநிலங்களில் தமிழகத்துக்கு தனியான இடத்தைப் பெற்றுத்தரும்.
உங்களின் உயர்வும் உங்களின் எழுச்சியும் எங்களின் பலம். இது மறுக்க முடியாத உண்மை.
பாரத பூமியில் தமிழக மக்கள் வலிமைமிக்கவர்களாக ஆட்சி அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறும் போது ஈழத் தமிழர்களாகிய எங்களின் வலிமை தானாகக் கூடும். இது உண்மை.
எதுவாக இருந்தபோதிலும் உங்கள் மீது நடந்த தாக்குதல் எங்களைக் கதி கலங்க வைக்கின்றது என்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
அதேநேரம் தமிழகத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் என்பதால் நீங்கள் நிதானமாக நடவுங்கள். சட்டத்தின் உதவியை நாடுங்கள். எல்லாம் வெற்றி தரும்.
(valampuri)