கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து கருகி, சாம்பல் மேடாக காட்சியளிக்கின்ற நிலையில் தீ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுச் சந்தை வியாபாரிகள் உதவி எதிர்பார்த்துள்னர்.
புடவை, அழகுசாதனம் காலணிகள் கடைகளில் 60 க்கும் மேற்பட்ட கடைகளும், அனைத்து பழக்கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளது. ஒரு கடையில் ஏற்பட்ட தீ படிப்படியாக அனைத்து கடைகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு தங்கள் கண் முன்னே எரிந்துகொண்டிருப்பதனை அவதானித்த கடை உரிமையாளர்கள் செய்வதறியாது கதறி அழுத காட்சிகள் எல்லோரையும் கண் கலங்க வைத்தது.தீ ஏற்பட்டு சிறுதி நேரத்தில் பொலிஸ் நீர்த்தாங்கியும் அதன் பின்னர் கரைச்சி பிரதேச சபையின் நீர்த்தாங்கியும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயற்சி எடுத்த போதும் கட்டுக்கடங்காத தீச் சுவாலையை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் இராணுவத்தின் நீர்த்தாங்கிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்த போதும் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இந்த நிலையில் பொது மக்களும் பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
தீ ஏற்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் இராணுவ தீ அணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்தோடு கனரக வாகனம் மூலம் தொடர்சசியாக இணைக்கப்பட்டிருந்த கடைத் தொகுதியின் ஒரிடத்தில் இடிக்கப்பட்டு தீ ஏற்பட்ட பகுதிக்கும் ஏனைய பகுதிக்குமான தொடர்பு தூண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தீ தொடர்ந்தும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கிளிநொச்சி பொதுச்சந்தையில் உள்ள அனைத்து பழ வியாபார கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துவிட்டன.இந்த நிலையில் மறுமுனையில் கடை உரிமையாளர்களால் உடைக்கப்பட்டும் திறக்கப்பட்டும் பொருட்கள் வெளி எடுத்துவரப்பட்டது. அப்போது உதவிக்கு வந்த பலரும் கடைகளின் உள்ளே இருந்த பொருட்களை வெளியேகொண்டு சென்று பல இடங்களிலும் குவித்த நிலையிலும் பொருட்களுக்கு மேல் நீர்த்தாங்கிகள் வாகனங்கள் எறி கடந்து சென்ற நிலையில் அவையும் விற்பனைக்கு உதவாத நிலையில் சேதமடைந்துள்ளன. இதேவேளை, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட திருடர்களும் பொருட்களை திருடிச் சென்றுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ அனர்த்தம் காரணமாக பல கோடி ரூபா சொத்தழிவு ஏற்பட்டுள்ளது. இன்று மதியம்வரை சரியான மதிப்பீட்டு விபரங்கள் மேற்கொள்ளப்படவில்லை. கரைச்சி பிரதேச சபையினர் அதற்கான பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகள் அனைவருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன்கள் மற்றும் மொத்த வியாபாரிகளிடம் கடன்கள் உண்டு. இதனை தவிர வியாபாரத்திற்காக அடகு வைத்த நகைகள் என மிகப்பெரும் சுமைக்குள் வாழக்கின்றனர்.
இந்த நிலையில் ஏற்பட்ட தீ அவர்களது வாழ்கையை எரித்து விட்ட தீயாகவே அமைந்துள்ளதென வியாபாரிகள் தலையில் கைவைத்து கதறுகின்றனர். கிளிநொச்சி சந்தை வியாபாரிகளின் தற்போதைய கோரிக்கையாக சந்தைக்கான நிரந்தர கட்டடம், வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களை அரசு விசேட ஏற்பாடு மூலம் தள்ளுபடி செய்தல், அல்லது வட்டியை இரத்துச் செய்தல், காலத்தை நீடித்தல், வியாபாரிகள் வழமைக்கு திரும்பும் வரைக்கும் விசேட நிதி ஒதுக்கீடு மூலம் வாழ்வாதார உதவிகள், கிளிநொச்சி நகரத்திற்கு ஒரு தீ அணைப்பு வாகன வசதியை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட வியாபாரிகள் முன் வைக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன் அமைந்திருந்த தனியார் புடவைக் கடை ஒன்று தீ பற்றி எரிந்து போது தீ அணைப்பு வாகனம் கிளிநொச்சியில் இல்லாத காரணத்தினால் கடை முற்றுமுழுதாக எரிந்து அழிந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து தீ அணைப்பு வாகனம் வருவதற்கு முன் வியாபாரம் நிலையம் முற்றாக அழிந்து விட்டது. அதன் போது கிளிநொச்சியில் பலராலும் கிளிநொச்சிக்கான தீ அணைப்பு வாகனம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் அது தொடர்பில் எவரும் கவனத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது சந்தையில் ஏற்பட்ட தீ மீண்டும் குறித்த தேவையை வலியுறுத்தியுள்ளது. தீ அணைப்பு வாகனம் கிளிநொச்சியில் இருந்தால் அது குறித்த நேரத்திற்குள் சம்வப இடத்திற்கு விரைந்திருந்தால் நிலைமை இந்தளவுக்கு விபரீதமாக மாறியிருக்கிறாது என்று வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.