கிளிநொச்சி பொதுச்சந்தையில் நேற்றைய தினம் இரவு ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்தினால் 75க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த அனர்த்தத்தில் கோடிக்கணக்கில் சொத்திழப்பு ஏற்பட்டுள்ளதால் செய்வதறியாத நிலையில் வர்த்தகர்கள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதுடன் கிளிநொச்சி நகர் நேற்றிரவு முழுவதும் பெரும் அல்லோலகல்லோலமாக காட்சியளித்தது.
பகல் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிய கிளிநொச்சி நகர் இரவு 9.30 மணியளவில் மெதுவாக ஓய்ந்து போயிருந்தது. நகரில் ஆங்காங்கே சில கடைகள் அந்த இரவு நேரத்தில் திறந்திருந்த போதிலும் தீ விபத்துக்குள்ளான பொதுச் சந்தை கட்டடத்திலிருந்த பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன.
வழமையாக தமது வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு நேற்று வெள்ளிக்கிழமை என்பதனால் திருஷ்டி கழிப்பிற்காக கடைகளின் முன்னால் கழிப்பு எரித்த பின்னர் அதை அணைத்துவிட்டு வர்த்தகர்கள் சென்றுள்ளனர்.இவ்வாறு அனைத்து கடைகளும் 9 மணிக்குள் மூடப்பட்டுவிட்டன. இந்த நேரத்தில் தான் இந்த பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பொதுச் சந்தையில் உள்ள கடையொன்று முதலில் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. தீ வேகமாக ஏனைய கடைகளுக்கும் பரவ ஆரம்பிக்க பொதுச் சந்தைக் காவலாளி, வீதியில் சென்றோர் கட்டடத்தில் தீ பரவுவதனைகண்டதும் உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.பொதுமக்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி எடுப்பதற்கிடையில் தீ கட்டடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் கட்டடத்திற்கு அருகாமையில் கூட யாரும் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த இராணுவம் மற்றும் பொலிஸார் தண்ணீர் பவுசர்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர கடும் முயற்சி செய்தனர்.
இவர்களோடு தீயை கட்டுப்படுத்த கிளிநொச்சி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடினார்கள்.
அப்போதும் கொழுந்து விட்டெரிந்த தீ கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. எனினும் தொடர்ந்திருந்த பொதுமக்களின் கடும் முயற்சியினாலும் வவுனியாவிலிருந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸ், இராணுவத்தினரின் உதவியின் மூலம் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இவ் அகோர அனர்த்தத்தில் 75 இற்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதோடு 30 இற்கும் மேற்பட்ட கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு எரிந்து சேதமாகிய கடைகளினால் கோடிக்கணக்கான ரூபாய் சொத்திழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புடவைக்கடைகள், பழக்கடைகள், பல்பொருள் விற்பனை நிலையங்கள், அழகு சாதனக் கடைகள் என அனைத்து வகையான கடைகளும் வேறுபாடின்றி எரிந்து நாசமாகியுள்ளன.
தமது கடைகள் தம் கண்முண்ணே பற்றி எரிவதை கண்ட வர்த்தகர்கள் சிலர் அழுது புலம்பியும், மயங்கியும் இன்னும் சிலர் தீக்குள் பாய்ந்து சென்று தீயை அணைப்பதற்கும் முயற்சித்த சம்பவங்கள் அனைவரது நெஞ்சினையும் கனக்க வைத்தன.
கிளிநொச்சிக்கென ஒரு தீயணைப்பு படைப்பிரிவு இருந்திருந்தால் இந்தளவுக்கு அழிவு ஏற்பட்டிருக்காது என பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் வலம்புரியிடம் தெரிவித்தனர்.
மேற்படி தீயனர்த்தத்தினால் இன்றைய தினம் கிளிநொச்சி பொதுச் சந்தை திறக்கப்பட மாட்டாது என்ற அறிவித்தலையும் பொது மக்களுக்கு வர்த்தகர்கள் விடுத்துள்ளனர்.
தீயணைப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் சில இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தீ அனர்த்தத்துக்கான காரணம், முழுமையான சேத விபரம் எவையும் நேற்று இரவு வரை பெற்றுக் கொள்ள முடியவில்லை.