காவிரி நீரை மறுத்து தமிழர்களைத் தாக்கும் கர்நாடக இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முற்றுகை 14-09-2016 அன்று மே பதினேழு இயக்கத்தால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.
இந்த முற்றுகைப் போராட்ட்த்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் தோழர் சின்னப்ப தமிழர், தோழர் திருமலை மற்றும் பல்வேறு தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
தமிழர்கள் தாக்கப்படுவதற்கு துணை போகும் இந்திய அரசினைக் கண்டித்தும், தமிழர்கள் தாக்கப்படுவதில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சின் சதியினைக் கேள்வியெழுப்பியும், பாஜக,காங்கிரஸ் கட்சிகள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், காவிரி டெல்டாவை நிலக்கரி, பெட்ரோல், மீத்தேன் எடுத்து பாலைவனமாக்கும் ONGC, Reliance உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் தோழர்கள் முழக்கமிட்டனர்.
தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்க இந்திய அரசு எதற்கு என்றும் கேள்வியெழுப்பினர். காவிரி தண்ணீர் சர்வதேச நதிநீர் பங்கீட்டு சட்டங்களின்படி தமிழகத்தின் உரிமை என்றும், தண்ணீரை தனியார்மயமாக்க கன்னட இனவெறி அரசு தமிழர்களின் தண்ணீரை மறுப்பதாகவும், கர்நாடக உழைக்கும் மக்கள் எங்கள் எதிரியல்ல என்றும், கன்னட உழைக்கும் மக்களுக்கும், தமிழக உழைக்கும் மக்களுக்கும் இந்தியா துரோகமிழைப்பதாகவும், கர்நாடக மக்கள் அடிப்படைவாத்த்தினை ஆதரிக்காமல் தமிழக விவசாயிகளுடன் இணைந்து இந்தியாவின் தனியார்மய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும், தண்ணீரை காசாக்கி விற்கிற பெரு நிறுவன்ங்களுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்றும் பேசினர். மோடி மற்றும் சோனியாவின் உருவப் படங்கள் எரிக்கப்பட்டன.