ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு நீதி கோரும் போராட்டங்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனான சந்திப்பு நடவடிக்கைகள் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கையில் பலவந்தமாக அல்லது தன்னிச்சையாக காணாமல் போதல்கள் பற்றிய ஐ.நா செயற்குழுவின் அறிக்கை நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த அமர்வுக்குப் புறம்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து, தமிழ் மக்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளனர். ஜெனீவா தீர்மானம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புலம்பெயர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோரியும் எதிர்வரும் 26ஆம் திகதி ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.