பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 15 வயது சிறுவன் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகரான பாரீஸில் மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 15 வயது சிறுவன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டுள்ளான்.
கைது செய்யப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை அவன் பொலிசாரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதில், சிரியாவில் இருந்து உத்தரவு வந்ததாகவும், அந்த உத்தரவை பின்பற்றி பாரீஸில் பெரும் நாசவேலையில் ஈடுப்பட சிறுவன் திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பொலிசார் சிறுவனின் பெயரை வெளியிடவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாரீஸ் நகரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் அச்சம் பொதுமக்கள் இடையே பரவி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை அன்று காரில் எரிவாயு சிலிண்டர்களை வைத்து அதன் மூலம் ஈபிள் கோபுரத்தை தகர்க்க முயன்ற 4 பெண் தீவிரவாதிகள் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மேலும், பிரான்ஸ் நாட்டில் சுமார் 1,500 பேர் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமரான மேனுவல் வேல்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து பிரான்ஸ் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.