தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி தேசிய கைதிகள் தினமான நேற்றைய தினம் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மன்னார் மாவட்ட பிரஜைகள்குழு, விடுதலையான தமிழ் அரசியல் கைதிகள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முற்பகல் 10.30 மணியளவில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பமாகிய போராட்டம் சுமார் ஒருமணிநேரம் வரை நடைபெற்றது. இதன்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரும் துண்டுப் பிரசுரங்கள் பேருந்து நிலையம் மற்றும் வைத்தியசாலை வீதி ஆகிய இடங்களில் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
நல்லாட்சி அரசில் நல்லிணக்கம், சமாதானம், சமத்துவம் மலர வேண்டுமானால் இலங்கைச் சிறைகளில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமல்லவா, நாட்டில் மனித உரிமைகள் மேம்பட்டுள்ளதாக நம்பப்படுகின்ற இவ்வேளையில் 25 வருடங்கள் அடைபட்ட சிறைகளில் அரசியல் கைதிகளின் இருப்பு நியாயமானதா? போரில் ஈடுபட்டுள்ளோரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியுமாயின் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரு பொறி முறை ஏற்படுத்த முடியாதா?
“மறப்போம் மன்னிப் போம்” என்பதெல்லாம் மூடிய சிறைக்குள்ளிருக்கும் அரசியல் கைதிகளுக்கு விதி விலக்கானதா? அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாது இன நல்லிணக்கம் ,தேசிய ஒற்றுமை சாத்தி யமானதா? பயங்கரவாத தடைச்சட்டத்தின் பலிக்கடாய்களாய் அப்பாவி அரசியல் கைதிகள் வருடங்கள் பல கடந்தும் வலிசுமந்து சிறையிலிருப்பதா? மதத்தலைவர்களும் மனித உரிமைவாதிகளும் புரிந்து கொண்ட அரசியல் கைதிகள் விடுதலையை நல்லாட்சி அரசாங்கம் அறிந்து கொள்ளுமா?
நாடெங்கிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 230 பேர் மட்டும் தானா மூன்றரை தசாப்த கால போருக்கு காரணம்? அரசியல் கைதிகளின் கால வரையறையற்ற சிறைவாழ்வு அவர்கள் சார்ந்த சமூக த்தையே சீரழித்து சின்னா பின்னமாக்குவதை எத்தனை பேர் அறிவார்கள்?, நாட்டில் நல்லாட்சியாம்! சமாதான மாம்! நாங்கள் மட்டும் பிள்ளைகளைப் பிரிந்து கண்ணீரும் சோறும் கலந்துண்பது எத்தனை காலம்?
பள்ளி செல்ல வேண்டிய அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பாதையோர வியாபாரத்தில்! ஏதுமறியா பிஞ்சு கள் பாவமல்லவா? சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு அரசியல் கைதிகளுக்கு இல்லையா? அரசியல் கைதிக ளின் நீண்ட நெடும் சிறையிருப்பு நிலையான இன ஒற்றுமையை இல்லாமல் செய்யாதா? சமூக பொரு ளாதார கலாசார பிரச்சி னைகள் அரசியல் கைதிகளின் குடும்பங்களைத் தினம் தினம் காயப்படுத்துவதை அறிவீர்களா? என இதன்போது வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட மனிதவுரிமை அமைப்புககள் சார்ந்தோர்,அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.