பெங்களூருவில் கன்னட வெறியர்களால் தமிழ் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசையும், பெங்களூரு காவல்துறையையும் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை விவரம்: மொழி வெறி அமைப்பினர் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயம் குறித்து முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக தமிழ் இளைஞர் ஒருவர் பெங்களூருவில் கன்னட வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நாளில் இருந்தே, அங்கு தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை சில கன்னட மொழி வெறி அமைப்புகள் பரப்பி வருகின்றன.
தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகளையும், சரக்குந்துகளையும் தாக்கிய கன்னட வெறியர்கள், அவற்றின் கண்ணாடிகளில், தமிழர்களே… காவிரி நீர் கேட்கிறீர்களா? உங்களுக்கு எங்களின் சிறுநீர் வேணுமா? என்று எழுதி தங்களின் கீழ்த்தரமான எண்ணத்தையும், நடத்தையையும் வெளிப்படுத்தினர். அமைதி காக்கும் தமிழகம் பெங்களூரு, மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் நடத்தும் வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், தமிழகமும், தமிழர்களும் அமைதி காத்து வந்தனர்.
அடுத்தகட்டமாக தமிழர்கள் மீதான நேரடித் தாக்குதலை கன்னட வெறியர்கள் தொடங்கியுள்ளனர். பெங்களூரு கிரி நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் உள்ள நடிகர் – நடிகைகள் போராடாமல் இருப்பது குறித்தும், கர்நாடகத்தின் பக்கம் நியாயம் இல்லாத நிலையிலும் கன்னட நடிகர் – நடிகைகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருவது குறித்தும் அவரது முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
https://youtu.be/mdZIvMir6PE