இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள், இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் எமது மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் தெரிவித்தார்.
தற்போது பிறக்கும் குழந்தைகள் கூட அதன்பாதிப்புக்குள்ளாவதாக சுட்டிக்காட்டிய அவர் உடலில் குண்டு துகள்களை சுமந்து கொண்டிருக்கும் அனைவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான பரீஸ் உடன்படிக்கை ஒப்புதலளித்தல் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்இ கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக எமது மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மக்களின் சொத்துக்கள், உயிர்கள் என்பன இழக்கப்பட்டமை ஒரு புறமிருக்கையில் இயற்கை வளங்களும் முற்றாக சிதைவடைந்துள்ளன.
இறுதி யுத்தத்தின் போது கொத்துக் குண்டுகள், இரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் எமது மக்கள் இன்றும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதன் விளைவுகள் தற்போது பிரதிபலிக்கின்றன. தற்போது பிறக்கின்ற குழந்தைகள் கூட பாதிப்புக்குள்ளாகிய நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறிருக்கின்ற நிலையில் யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்களாகின்றன.
இந்த கால பகுதியில் பல பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகள், பொதுமக்கள் அவ்வப்போது மயங்கி விழும் நிலைகள் காணப்பட்டுள்ளன. இவர்கள் உடலில் குண்டுத்துகல்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்குரிய மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இவர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கம் தொடர்பாக கவனம் செலுத்தும் அரசாங்கம் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என இச்சபையில் வலியுறுத்துகின்றேன்.
அதேநேரம் இயற்கை வளங்கள் நிறைந்த வன்னிப்பிரதேசம் யுத்தத்தின் காரணமாக முற்றாக அழிவடைந்துள்ளது. இதனால் வெப்ப நிலை அப்பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று இயற்கை அனர்த்தங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன.
விசேடமாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் கடலரிப்பு அதிகரித்துள்ளது. மறுபுறம் நீர் நிலைகளில் நீர் வற்றுவதனால் முனைப்பான விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே சூழல் சம நிலையை பேணுவதற்குரிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.
இதேபோன்ற நிலைமைகள் தான் கிழக்கு மாகாணத்திலும் காணப்படுகின்றன. ஆகவே குறித்த பரீஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் எதிர்காலத்தில் இலங்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.