சிரியாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பினரால் வழிநடத்தப்பட்டவர்கள் எனக்கூறப்படும் பெண் பயங்கரவாதிகள் மூவரை, அவர்களது மறைவிடத்தில் வைத்து மடக்கிப்பிடித்ததன் மூலம் பேரழிவை ஏற்படுத்தவல்ல புதிய தாக்குதல்களைத் தனது படையினர் தடுத்துவிட்டதாக பிரான்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.
பாரிஸ் நகரின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான Gare de Lyon நிலையத்தில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலை நடத்த இவர்கள் மூவரும் ஆயத்தமாகி இருந்தனர் என்று பாதுகாப்பு அதிகாரிகளை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்போத…ும் உல்லாசப்பயணிகளால் நிறைந்து காணப்படும் Notre Dame தேவாலயத்தில் இருந்து சிலநூறு மீற்றர்கள் தொலைவில் காஸ் சிலிண்டர்களுடன் அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றைக் கடந்த வாரம் படையினர் கண்டுபிடித்திருந்தனர். இந்தக்காருடன் தொடர்புடையவர்களைத்தேடி நடத்தப்பட்ட சோதனையின்போதே பெண்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களது மறைவிடத்தை விசேடபடையினர் முற்றுகையிட்டபோது மூவரில் ஒருவரான 19
வயது யுவதி கத்தி ஒன்றினால் பொலிஸார் ஒருவரைத்தாக்கிக் காயப்படுத்தியதை அடுத்து அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டு காயமுற்ற நிலையில் பிடிபட்டிருக்கிறார்.காஸ் சிலிண்டர்களுடன் மீட்கப்பட்ட கார் இந்த யுவதியின் தந்தையுடையது எனத் தெரியவந்ததைஅடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போதே பெண்களின் மறைவிடம் பற்றிய தகவல் புலனாய்வாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
தனியே பெண்பயங்கரவாதிகள் மட்டும் தங்கியிருந்த மறைவிடம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்திருக்கும் அரசு வழக்குரைஞர், இது பிரான்ஸ் எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தல் மேலும் விரிவடைவதைக்காட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகப் புகழ் பெற்ற Notre Dame Cathedral பகுதியில் மீட்கப்பட்ட காரில் காணப்பட்ட ஆறு சமையல் வாயு சிலிண்டர்களும் காரோடு சேர்த்து வெடிக்கவைத்துப் பேரழிவை ஏற்படுத்தும் திட்டத்தோடு அங்கு எடுத்துவரப்பட்டவையாக இருக்கலாம் எனச்சந்தேகிக்கப்படுகிறது. எனினும் வெடிக்கவைக்கும் கருவிகள் எதுவும் காரில் காணப்படவில்லை. மாறாக உள்ளே சில பெற்றோல் போத்தல்கள் காணப்பட்டுள்ளன. இது காரை தீப்பற்றச்செய்வதன்முலம் காஸ் சிலிண்டர்களை வெடிக்கச்செய்யும் நோக்கம் இருந்திருக்கக்கூடும் என்பதைக்காட்டுவதாக விசாரணைத்தகவல்கள் கூறுகின்றன.
ஐ. எஸ். பயங்கரவாதிகள் பிரான்ஸில் கார்குண்டுத்தாக்குதல்களை நடத்தக்கூடிய நிலையை எட்டியிருக்கிறார்கள் என்று நாட்டின் உள்ளகப் புலனாய்வுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில்தான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.