அவர்கள் வருவார்கள்….

0
270

Avarkal-Varuvaarkal.....-600x338

டியும் ஒவ்வொரு நிமிடங்களிலும் பாதாளத்தின் நடுவே மெல்லிய கயிற்றில் தொங்குவதானதொரு உணர்வலையே தருகிறது. வாழ்வின் இழையங்கள் அறுந்து போனதாகவும் எதிலுமே பிடிப்பில்லாததான விசனமுற்ற நாட்களாகவுமே கழிக்கின்ற பொழுதுகள் தான் தொடருகிறது.

யாருடனும் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் பேசவே இயலாத இந்தப் பொழுதுகளில் இப்போதே மரித்துவிட வேண்டுமென்பதாய் மனசு அலைகிறது. நிம்மதியைத் தொலைத்த நீழும் இரவுகளில் சிலுவை சுமக்கும் கல்வாரிப்பயணமெனத் தைக்கிறது படுக்கை.

இப்படித் தூக்கத்துக்காய் கிடந்தது தவிக்கும் போதெல்லாம் தொலைந்துபோன அந்த இனிமையான பொழுதுகள் தான் நினைவுக் குமிழ்களாய் நெஞ்சில் கசிகிறது.

உயர்தரப் பரீட்சை (A/L) எடுத்துவிட்டு தேர்வுக்காகக் காத்திருந்த அந்த நாட்களில் சைக்கிள்களில் கூடிக் கூடித் திரிந்து களைத்துப்போனபோது கடலையும் பனங்கிழங்கும் வாங்கிக் கொண்டு வந்து நீண்டு நிமிர்ந்த அந்தப் படைகளின் நடுவே வளைந்திருந்து சாப்பிடும் அலாதி சுகம் எப்போதும் எங்களை விட்டுப் போனது என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். களைத்துப்போகும் நெஞ்சில் இரத்தங்கள் கசிவதாய் எங்கோ தாளாத வலிதான் ஏற்படுகிறது.

கிராமக்கோட்டுச் சந்திக்குப் போகும் மெயின் றோட்டில் இருந்து இருநூறு யார் தள்ளிக் கிடக்கும் வெட்டைவெளியில் வெயில் வெயிலாய் மட்டைப்பந்து ஆடியபடி சிறுவர்கள் குதூகலிப்பர். பனைகளின் கீழே விரிந்து போய்க்கிடக்கும் நிழலில் நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டே நீண்ட நேரமாக உட்கார்ந்திருப்போம். மாலை வரும் வரை யாரும் அந்த இடத்தைவிட்டு நகரவே முடியாதளவுக்கு சுவாரஷ்யமான விடயங்களெல்லாம் சம்பாசனைகளில் வந்துபோகும்.

சீலன் தன் சினேகிதி பற்றி எந்த நேரமும் கதைத்துக் கொண்டேயிருப்பான். அவள் மீது தான் உயிரையே வைத்திருப்பதாகவும், அவளையே கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறிக் கொண்டிருந்தான். பீற்றரின் கனவெல்லாம் விழுந்து போய்க் கிடக்கும் தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவே இருந்தது. என்னென்ன தொழில் செய்தால் முன்னேறலாம் என்பதை ஆலோசித்தபடியே இருப்பான். றிசல்ற்றைப் பார்த்துவிட்டு ஏதாவது சொந்தமாய் தொழில் தொடங்கப் போவதாக அவனுக்கு எண்ணம் இருந்தது. சுரேசிற்கு எந்த விதமான ஐடியாக்களே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சிரித்தபடியே இருப்பான் அப்பாவி.

ஆனால் பின்னாளில் கூட்டிப்பிய்த் தெறிந்து குருவிகள் களைந்து, பிரிந்து போன மாதிரி எவ்வாறெல்லாம் ஒருவரையொருவர் அறியாத படிக்கு கண்காணாத தூரங்களில் எல்லாம் தொலைந்து போனார்கள்.

இப்போதும் அந்த வெளியில் அடித்த பந்தை எடுக்கச் சிறுவர்கள் ஓடுவதாகவும் கிராமக் கோட்டுச் சந்திக்குப்போகும் தெருவில் சந்தையால் போகும் கதிரேசு மாமா கள்ளுக் குடித்த உற்சாகத்தில் காத்தவராயன் பாட்டுப் பாடிக்கொண்டு போவது போலவும், கீக்கிறீக்…… கீக்கிறீக் என்று அவரது சைக்கிள் சத்தம் காதில் ஒளிப்பதாக்கவுமே படுகிறது. மீண்டும் மீதும் அந்தப் பணிகளும் அவற்றுக்கப்பால் விரியும் வெளியும் தான் ஞாபகத்தில் படர்கிறது.

இப்போது அந்தக் மட்டைப்பந்து சிறுவர்கள் எங்கெல்லாம் சிதறிப் போனார்களோ? அதில் எத்தனை பேர் காணாமல் போனோர் பட்டியலில் இடம் பிடித்தார்களோ?

எங்கள் ஊருக்கு இராணுவம் வந்தபோது முதல் முதலில் அந்தப் பனைகளின் நடுவே தானாம் சென்றி போட்டு உட்கார்ந்தது. பின் ஒவ்வொரு பனைகளாய்த் தரித்து பெரிய பண்டும் பங்கருக்கு அமைத்து நிரந்தரமாய் தன் இருப்பைப் பலப்படுத்தியபோது அந்த இராணுவ மினிமுகாமைச் சுற்றியிருந்த ஏராளமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இதைக் கேள்விப்பட்டதும் தாங்கள் சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய வீடு இப்படிப்போனதே என்று அப்பா அதிர்ந்து போனார். அவரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் ஏகப்பட்ட பிரயத்தனங்கள் செய்யவேண்டியிருந்தது.

வெளியில் உயிரை உறையவைக்கும் பீதியைத் தருவதாய் இருள் கவிந்து கிடக்கிறது. எங்கும் நிசப்தமே நிலவுகிறது. இந்த நாய்கள்கூட இப்போது குளிப்பதை நிறுத்திவிடடனவோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது. சரி இந்த வேப்பமரத்து வெளவால்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன? முந்தியெண்டால் வேப்பம்பழக் காலத்துக்கு எங்கிருந்து தான் அப்படி வருகின்றனவோ, கொள்ளை கொள்ளையாய் வந்து மரத்தில் மொய்த்துக் கிடந்தது கத்தலும் சடடடப்புமாகவே இரவிரவாகத் தொல்லைகள் கொடுப்பன.

இப்போது எங்கேயும் அவற்றின் அசுகைகூட தெரிவதில்லை. அதுகள் கூட எங்காவது தொலை தூரங்களுக்கு புலம்பெயர்ந்து போய்விட்டனவா? அல்லது யாருக்கும் ஓசைப்படாமல் வந்து தங்களின் கருமங்கள் முடித்துக் கொண்டு போய்விடுகின்றனவா?

எதுவுமே நிலையற்றதாகிப் போன துயர்தரும் வாழ்வு நாளைய இருத்தல் என்பது நிச்சயமில்லாத போது எதிலுமே லயிப்பற்ற ஐடமாகத்தானே நடமாட முடிகிறது.

முன்னரென்றால் எங்கள் ஊர் ஆழ்வார் கோயில் ஆவணி மாதத்தில் வரும் கடைசி மூன்று தினங்களும் விடிய விடியத் திருவிழாவில் மூழிகிக் கிடக்கும். சுற்றுப்புறமெல்லாம் ஒளிவெள்ளத்தில் பளிச்சிட பட்டுச் சாறிகள் மினுங்கும். நாலு முழவேட்டிகளோடு நாலைந்து பேராய் அந்த ஐன நெரிசலில் உலாவருவதே சுவர்க்க சுகம். அவ்வாறான ஒரு வருடத் திருவிழாவில் தான், மனேச்சற்ற மகள் வசந்தனோடு ஓடிப்போனாள். கனகம் மாமியின் மகளை வரணியில இருந்து வந்த மாப்பிள்ளை பகுதி இந்தத் திருவிழாவில் தானாம் பெண் பார்த்தார்கள். இன்னும் என்னனென்னமோ சங்கதிகள் எல்லாம் அங்கு நடந்து முடியும்.

மூன்றாம் நாள் பொங்கல் வைத்துத் திருவிழா நிறைவெய்தும் போது மூன்று நாளும் இளசுகள் தாம் பரிமாறிக் கொண்ட பார்வைகளையும், பறிகொடுத்த மனசுகளையும் மீளப் பெறமுடியாத துயரங்களையும் மீட்டியவாறு வீடு நோக்கிப் போய்க்கொண்டிருப்பார்.

மூன்று நாளும் மாமிசம் உண்ணாது விரதமிருந்து பூச முடித்த கனபேர் வெறும்மேலுடன் நேரே கள்ளுக்கடை நோக்கித் திருவிழாவில் நடந்த குற்றங் குறைகளைப்பற்றி கதைத்தவாறு நடப்பார். வீடு திரும்பும் போது மீனோ, இறைச்சியோ, பாசலோ கையில் இருக்கும். இன்னும் சிலர் வெறிச்சோடிப்போன வெளிமண்டலத்தில் இருந்து கூடிக் கதைப்பார். சில வேளைகளில் அதில் ஐயரின் தலையும் தெரியும்.

இவையெல்லாம் எம்மை விட்டுப்போய் நெடுநாளாயிற்று.

எங்கு போனாலும் ஐந்து மணிக்குள் வீடு திரும்பும் அவசரம். ஒப்பாரி கேட்டால் உறவுக்காரரெண்டாலும் விடிந்த பின்பே துக்கம் விசாரிக்கும் துர்ப்பாக்கியம்.

இந்த முன்னிரவில் நிம்மதியற்றுத் தூக்கம் வரமறுக்கும். இந்த நிமிடங்களில் யாருமே அறிய முடியாதபடிக்கு என் சாவன் கதறுகிறது. ஊ………… ஊ…………. என்றிரைக்கும் காற்று பனையோலைகளில் பட்டு சரசரக்கிறது. இப்படி வீசும் இந்தக் காற்று மனித வெறியர்கள் குறிவைத்துக் காத்திருக்கும் அந்த முகாமினுள்ளும் உக்கிரமாய்ப் பெரும்புயலேன அவர்களை அள்ளுண்டு, அடிபட்டு திணறடிக்கப் பண்ணுவதாய் வீசவேண்டுமென மனம் அலாவுகிறது.

இந்த இரவின் அந்தக் காரிருளில் அந்த முகாமினுள்ளே புகைபிடித்தவறே குரூரம் கொப்பளிக்கும் தொனியில் ஏதாவது கதைத்தும் சிரித்தும் கொண்டே அவர்கள் இருப்பார்கள்.

சென்றியில் நிற்பவனின் துப்பாக்கி, அப்பிராணியொருவனைத் தீர்த்துக் கட்டிய பெருமிதத்தில் ஒய்ந்துரங்கும் அல்லது யாரையாவது குறிவைத்தபடி வெடித்துச் சிதற இருக்கும் அந்தக் கொடூர கணநேரத்துக்காக காத்துக் கிடக்கும்.

இன்னும் உள்ளே கிருசாந்தியைப் போலோ ராஜினியைப் போலோ யாராவது அவர்களின் காம இச்சைக்கு கதறிக் கதறி தங்களை இழந்து கொண்டிருக்கலாம்.

இரண்டு நாங்களுக்கு முன்பும்கூட முகாமினுள்ளே யாரோ ஒருபெண் அலறும் சத்தம் கேட்டதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள். அந்த முகாமிற்கு அவர்கள் வந்த புதிதில் ஊரில் இல்ல சனங்களோடு மிகவும் பண்பாகவும் நடந்து கொண்டதாகப் புளிகித் திரிந்தவர்களில் அனேகம் பேரினது உறவினர்கள் அவர்களைத் தேசி ஒரு நாளைக்குப் பல தடவை முகாமை நோக்கி அலைந்து திரிவதுதான் மிகவும் மனவேதனையைத் தருகிறது. சனங்கள் அவர்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை கொண்டு நடந்தார்கள்.

உயிர் கரையும் இந்த ராத்திரியிலும் சென்றியில் இருந்தவாறு அந்தக் கொடிய விழிகள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனவோ அவர்கள் இந்த இருளை ஊடறுத்துக் கிழித்தவாறே இந்த இருளோடு இருளாய் கலந்தவாறே வருவார்கள்.

அவர்களரு வரவுக்காய், அந்த மீட்பாளர்களின் வருகைக்காய் இங்கு எத்தனை பேர் காத்த்துக் கிடக்கிறார்கள்.

அவர்கள் வருவார்கள் என்கிற நினைவே நெஞ்சில் நிறைவைத் தருகின்றது .

ஏக்கத்துடன்:- முல்லைக்கோணேஸ்
களத்தில் (12.08.1999) இதழிலிருந்து

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here