இறுதியுத்தத்தில் ஐக்கிய நாடுகளின் தலையீடு போதுமானதாக இருந்திருக்கவில்லை.
ஐ.நா. பாரிய தவறுகளை இழைத்திருக்கிறது அது சிரத்தையுடன் செயற்பட்டிருக்குமாயின் பல மனித உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா பாரிய தவறுகளை இழைத்திருப்பதாக வும், அது சிரத்தையுடன் செயற்பட்டிருக்குமாயின் பல மனித உயிர்க ளைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஐ.நா செயலாளர் நாயகம் நேற்று கொழும்பில் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
கொடும்போர் இடம்பெற்ற இறுதி ஏழு மாத காலப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்த பான் கீ மூன், யுத்த வெற்றி இலங்கைகக்கு அளப் பரிய நன்மைகளை வழங்கியிருக்கின்ற போதிலும், அதற்காக அதியுச்சக் கட்ட விலை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பான் கீ மூன் நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட நிகழ் வொன்றிலேயே இந்தத் தகவல்களைத் தெரி வித்திருக்கிறார்.
ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்த உலகின் செயற்பாடு என்பது மிகவும் கடுமையான ஒரு சோதனையாக இருக்கிறது. யுத்தத்தின் இறுதிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவந்தமை இந்த நாட்டிற்கு அளப்பரிய நன்மைகளைக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதற்காக அதியுச்ச விலைகொடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையர்கள் தற்போது கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மீளாய்வு செய்வதிலும், நல்லிணக்க நடவடிக்ககளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.நா தான் இழைத்த தவறுகள் குறித்தும் விசாரணை செய்தது. இதற்காக நான் ஒரு நிபுணர்கள் குழுவொன்றினை அமைத்து விசாரணை செய்தேன். இதனூடாக ஐ.நா அமைப்பும், அதன் உறுப்பு நாடுகளும் கட்டமைப்பு ரீதியான தவறுகளை இழைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
ஐ.நா இலங்கையின் இறுதி ஏழுமாதகாலப் பகுதியில் பாரிய தவறுகளை இழைத்திருக்கிறது. இந்தக் காலப்பகுதியில் ஐ.நாவும், அதன் கொழும்பு அலுவலகமும், உறுப்பு நாடுகளும் சிரத்தையுடன் செயற்பட்டிருந்தால் பாரியளவு உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்தார்.