பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

0
179

11505பரவிப்பாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும் இரண்டு வாரத்தில் பெற்றுத் தருவதாக எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய உறுதி மொழி நிறைவேறாத நிலையில் பரவிப்பாஞ் சான் மக்கள் மீண்டும் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று புதன்கிழமை இரவு முதல் ஆரம்பித்துள்ளனர்
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இதனையடுத்து, கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டதை அடுத்து, இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.இதனையடுத்து, ஐந்து நாட்களாக தொடர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள், தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு 14 நாட்கள் கால வரையறை நேற்று புதன்கிழமை 31ஆம் திகதி உடன் நிறைவடையும் நிலையில், பரவிப்பாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி மட்டுமே விடு விக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத பரவிப்பாஞ்சான் மக்கள் தங்களுடைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரி மீண்டும் தங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் அளித்த வாக்குறுதியின்படி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் படைத்தரப்பு ஏற்கெனவே தீர்மானித்ததன்படி மூன்றரை ஏக்கர் காணியை மட்டுமே விடுவித்துள்ளது. அதுவும் பொது மக்களிடம் இன்னும் கையளிக்கப்படவில்லை அரச அதிபரிடமே ஒப்படைத்துள்ளது.
சம்பந்தன் ஐயாவின் உறுதிமொழியை நம்பி நாம் எமது போராட்டத்தை கைவிட்டிருந்தோம். ஆனால் அவர் கூறியபடி எதுவும் இடம்பெறவில்லை. எனவே நாம் எமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளோம் என பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு 15 குடும்பங்களுக்கு சொந்தமான இன்னும் பத்து ஏக்கர் காணிகளை விடுவிக்க வேண்டும். எனவே அந்தக் காணிகளும் விடுவிக்கும் வரை நாம் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்துள்ளதாக பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here